“விளம்பரம் செய்யும்போது காஷ்மீர் மலை மீது ஏறி நின்றால் கூட நெட்வொர்க் கிடைக்கும் என்று சொல்வது. ஆனால் நாலடி நகரத்தை தாண்டினால் ஒரு பாயிண்ட் இரண்டு பாயிண்ட் என ஆடி கொண்டிருப்பது” இப்படி மொபைல் போன் பயன்படுத்தும் நம்மில் பலரும் ஒரு முறையாது யோசித்திருப்போம்.
அப்போதெல்லாம் பேசாமல் வேறு கம்பெனியின் சிம் வாங்கி விடலாமா என்று தோன்றும். இருக்கிற வேலையில் இதற்கு வேறு யார் பத்து முறை அலைவது என்று யோசிப்போம். ஆனால் அத்தனை முறை அலையாமல் ஒரே மெசேஜில் உங்களது நம்பரை வேறு ஒரு நிறுவனத்திற்கு போர்ட் செய்ய முடியும். அதற்கான வழிமுறையைதான் இன்று பார்க்க போகிறோம்.
இந்த முறையை சிம் போர்ட்டிங் என்று சொல்வார்கள். நீங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் சிம் நிறுவனத்திலிருந்து உங்களது ஆப்பரேட்டரை மாற்றி வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டுமென்றால் இந்த முறையை பயன்படுத்தலாம்.
முதலில் உங்கள் மொபைலிலிருந்து “PORT “ என்று டைப் செய்து அதற்கு அருகிலேயே உங்களது பத்து இலக்க மொபைல் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு மெசேஜ் மூலம் அனுப்ப வேண்டும். உங்கள் மாநிலத்துக்குள்ளேயே நீங்கள் உங்கள் நம்பரை போர்ட் செய்தால் மூன்று வேலை நாட்களில் உங்களது வேலை முடிந்து விடும். இதே உங்கள் வட்டாரத்தை தாண்டி என்றால் ஐந்து நாட்களாகும்.
இந்த ஐந்து நாட்களும் நீங்கள் எந்த வித தடையும் இல்லாமல் பழைய ஆபரேட்டரின் சேவையிலேயே உங்கள் சிம்மை பயன்படுத்தி கொள்ளலாம்.
நீங்கள் மெசேஜ் செய்த பிறகு உங்களது அப்போதைய ஆப்பரேட்டர் 8 இலக்கத்தில் UPC எண் ஒன்றை உங்களுக்கு அனுப்புவார். பிறகு அருகிலிருக்கும் நீங்கள் விரும்பக்கூடிய மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனத்திற்கு கொண்டு சென்று தேவையான சான்றிதழ்கள் மற்றும் UPC எண்ணையும் கொடுத்து விட வேண்டும்.
பிறகு எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு ஏழு நாட்களுக்குள் புதிய ஆப்பரேட்டர் உங்கள் சிம் போர்ட் ஆகும் நேரம் மற்றும் விவரங்களை அனுப்புவார். போர்ட் ஆகும் இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் உங்கள் சிம் வேலை செய்யாது. பிறகு உங்களின் புது சிம்மை மொபைலில் போட்டு புதிய ஆப்பரேட்டரோடு தடையில்லா நெட்வொர்க்கை பெறலாம்.