ஆண்டிபட்டி: மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, வைகை அணையில் இருந்து நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை 70 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் என பல பகுதிகளில் இருந்து வந்த தண்ணீர் வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், மதுரை வைகை ஆற்றில் இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடிவரை வந்த தண்ணீரால் யானைக்கல், மீனாட்சி கல்லூரி இணைப்புச் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் வைகைஅணையில் இருந்து நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விநாடிக்கு 3,700 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குடிநீருக்காக 69 கனஅடிநீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் அணையின் முழுக்கொள்ளளவான 71 அடி வரை தண்ணீரை தேக்க பொதுப் பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.