பெங்களூருவில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அங்குப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் சாலைகளில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை வைத்துக் கொண்டு சிரமப்படும் காட்சிகளை நம்மால் பெங்களூரில் காணமுடிகிறது.
பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மழை வெள்ளத்தில் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இளம்பெண் ஒருவரின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நேற்றைய தினம் பெங்களூரு நகரின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் அகிலா (23), என்பவர் அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தண்ணீர் தேங்கிய சாலையை அகிலா கடக்க முற்பட்டிருக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக அகிலாவின் ஸ்கூட்டி சறுக்கி விபத்துக்குள்ளானது. ஸ்கூட்டியிலிருந்து கீழே விழுந்த அகிலா, அருகிலிருந்த மின்கம்பத்தைப் பிடித்திருக்கிறார். அதில், மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து விழுந்தார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்சார வாரியத்துக்குத் தகவல் தெரிவித்து, இளம்பெண்ணை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு இளம்பெண் அகிலாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இளம்பெண்ணின் மரணம் பெங்களூரு மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், அகிலாவின் குடும்பத்தினர் மழைக்காலத்தில் மின்சாரக் கட்டமைப்பை முறையாகக் கையாளவில்லை என அகிலாவின் மரணத்துக்கு பெங்களூரு மாநகர பேரவை (BBMP) மற்றும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட்டை (BESCOM) குற்றம்சாட்டியிருக்கின்றனர்.