பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை அருகே, சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 2 பஸ்களில் இருந்த 70 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவிலிருந்து, தாண்டிக்குடிக்கு நேற்று அரசு பஸ் ஒன்று கிளம்பியது. பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல் தாண்டிக்குடியிலிருந்து வத்தலக்குண்டுவுக்கு மற்றொரு அரசு பஸ் புறப்பட்டது.
இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பெரும்பாறை அருகே, சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலையில் கோழிஊத்து பகுதியில் உள்ள வனத்துறை தீ தடுப்பு கோபுரம் அருகே வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக 2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த 70க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த தாண்டிக்குடி போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.