புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவனந்தபுரத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். புதுவை சார்பில் பொறுப்பு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார், ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. அந்த மாநாட்டில் மத்திய அரசின் பல துறைகளின் அதிகாரிகள் பங்கேற்பதால் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இருக்கும்.
அண்டை மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதால் மாநில பிரச்னைகள் குறித்தும் பேசி முடிவெடுக்கலாம். இந்த மாநாட்டில் பேசப்படும் கருத்துகள் பதிவுசெய்யப்பட்டு அவற்றின்மீது முடிவு எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். மாநாட்டில் பங்கேற்க வரும்படி புதுவை முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஒரு மாதம் முன்பே கடிதம் அனுப்பப்பட்டிருக்கும். அப்படியிருந்தும் அந்த மாநாட்டை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்த பின்னணி என்ன ?
கவர்னர் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்படுபவர். அவர் மத்திய அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படுவாரே தவிர, மாநிலத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார். முதலமைச்சர்கள் மட்டும்தான் மத்திய அரசிடம் துணிந்து பேச முடியும். மாநில பிரச்னைகள் குறித்து முதலமைச்சரால் மட்டுமே பேச முடியும். இதில் ரங்கசாமி பங்கேற்காதது துரதிஷ்டவசமானது. அவர் பங்கேற்காதது குறித்து மக்களிடம் விளக்க வேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல புதுச்சேரி மாநிலத்தின் சூப்பர் முதலமைச்சராக தமிழிசை செயல்படுகிறார்.
டம்மி முதல்வராக ரங்கசாமி இருக்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. ஒரு முக்கியமான முதலமைச்சர்கள் மாநாட்டை முதல்வர் புறக்கணிக்கிறார் என்றால், மாநில உரிமையை அவர் விட்டுக்கொடுக்கிறார் என்று அர்த்தம். அதற்காக புதுச்சேரி மக்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். காரைக்காலில் மாணவன் பாலமணிகண்டன் விஷம் கொடுத்து கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன வியாதி என்பதை முழுமையாக காரைக்கால் மருத்துவமனை கண்டுபிடிக்கவில்லை.
அதற்கான சிகிச்சையை கொடுக்கவில்லை. அந்த மாணவன் வாந்தி வருகிறது என்று சொன்னவுடன் அவருக்கு மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அதன்பிறகு அந்த மாணவனுக்கு விஷத்தாக்கம் அதிமானதால் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் விஷம் முற்றி அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் மெத்தனம்தான் அந்த மாணவனின் உயிரைப் பறித்திருக்கிறது. காவல்துறையும் மிகவும் மெத்தனபோக்குடன் நடந்துள்ளது. மாணவர் இறப்புக்கு மருத்துவர்களின் மெத்தனமும், காவல்துறையின் செயலற்ற தன்மையும் காரணம்.
ஆனால் முதலமைச்சரோ, காரைக்கால் நிர்வாகமோ, மருத்துவர்களோ இதுகுறித்து கவலைப்படவில்லை. இது ஒரு அவலமான நிலை. அந்த மாணவனின் இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். காரைக்கால் மருத்துவமனையின் அவலநிலை தொடர்கிறது. அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது தனி மருத்துவமனைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். முதல்வர் ரங்கசாமி உடனே இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க ரூ.15 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக தெரிவித்தேன். அதில் ரூ.90 கோடி கைமாறியுள்ளது எனவும் கூறியிருந்தேன். இதுவரை அது தொடர்பாக கலால்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ரங்கசாமியோ அல்லது அமைச்சர்களோ யாரும் பதிலளிக்கவில்லை. ஊழல் நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே புகாரும் செய்துள்ளனர். இதுமட்டுமின்றி கலால்துறை மூலம் சுற்றுலா என்ற பெயரில் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்குவதிலும் பல்வேறு ஊழல், முறைகேடுகள் நடக்கின்றன. ரூ.10 லட்சம் வரை பேரம் பேசி வாங்குகின்றனர்.
மதுக்கடைகளை இடமாற்றம் செய்வதிலும் விதிமுறைகள் மீறப்பட்டு, கையூட்டு பெறப்பட்டுள்ளது. கோயில், பள்ளி, விளையாட்டரங்கம் உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். தனி நபர்கள் பயனடையும் வகையில் கூனிச்சம்பட்டு, சோம்பட்டு சாராயக்கடைகள் இதுவரை ஏலம் விடப்படவில்லை. இதனால் மாதத்துக்கு அரசுக்கு ரூ.13 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புக்கு கலால்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியும், அதிகாரத்தில் உள்ளவர்களும் பொறுப்பேற்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் இதுபோன்ற நஷ்டங்கள் மாநில வளர்ச்சியை பாதிக்கும்” என்றார்.