ஸ்ரீநிவாஸ் என்பவர் தன் மனைவி, மகன் க்ஷிதிஜ் (Kshitij)-னுடன் டெல்லியில் வசித்து வந்தார். ஸ்ரீநிவாஸ் ஓய்வூதியம் தான் குடுப்பத்துக்கான ஒரே வரவு. இந்த நிலையில், ஸ்ரீநிவாஸ் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, ஓய்வூதியமும் நின்றுபோக குடும்பத்தை ஸ்ரீநிவாஸின் மனைவி காப்பாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை க்ஷிதிஜ் தன் நண்பன் ஒருவனுக்கு தொலைப்பேசியில் அழைத்து, “அம்மாவைக் கொன்றுவிட்டேன். நானும் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்” எனக் கூறியிருக்கிறார். அதே நேரம் க்ஷிதிஜ் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கிறது. உடனே, அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை க்ஷிதிஜ் வீட்டுக்குள் நுழைந்தபோது அழுகிய நிலையில் க்ஷிதிஜ் தாயின் உடல் கழுத்து அறுக்கப்பட்டு குளியலறையில் கிடந்திருக்கிறது. மற்றொரு அறையில் க்ஷிதிஜ் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார். மேலும், அந்த இடத்தில் கிடைத்த 77 பக்க தற்கொலைக் குறிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த தற்கொலை குறிப்பில், “சிறுவயதிலிருந்தே எனக்கு நண்பர்கள் இல்லை. தனிமையில் தான் பெரும்பாலான நேரம் இருப்பேன். 10 வருடங்களுக்கு முன்பு அப்பா இறந்துவிட்டார்.
குடும்பம் பெரும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. குடும்பம் இருந்த சூழலில் எனக்கு எதுவும் பெரிதாகக் கிடைத்ததில்லை. அம்மா ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் 25 வயதான நான் எங்கெல்லாமோ வேலை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவுக்கு நாளாக நாளாக நோய் அதிகமாகிக்கொண்டே சென்றது. அம்மாவின் கஷ்டத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால்….
அம்மாவைக் கொன்றுவிட முடிவு செய்தேன். முதலில் அம்மாவின் கழுத்தைச் சங்கிலியால் நெரித்தேன். ‘கழுத்தை நெரித்து இறக்கும் ஆன்மாவுக்கு முக்தி கிடைக்காது’ என்று எங்கோ படித்ததால், கழுத்தை அறுத்தேன். மேலும், பகவத்கீதையில் இருந்து ஒரு அத்தியாயத்தைப் படித்து, ‘கங்கா ஜல்’ புனித நீரை அம்மாவின் உடலில் தெளித்ததால், அவர் முக்தி அடைந்தார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு, “க்ஷிதிஜ் தாயைக் கொன்றுவிட்டு அந்த சடலத்துடன் 3 நாள்கள் தங்கியிருந்திருக்கிறார். அதன் துர்நாற்றம் வெளியே தெரியாமல் இருக்க வீட்டில் இருந்த வாசனை திரவியங்களை சடலத்தின்மீது ஊற்றியிருக்கிறார். அதன் பிறகே தற்கொலை செய்துகொண்டார். வேலையில்லாமல் இருந்ததால் தன் தாயாருக்கு தன்னால் மருத்துவச் செலவைகூட செய்யமுடியவில்லை என்ற மனச்சோர்வில் இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.