கடலூர்: கடலூர் முதுநகரிலிருந்து விருத்தாசலம் வரை 125 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னையிலிருந்து திருச்சி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கும், தென் தமிழகத்தில் இருந்து சென்னை, காசி, ராமேஸ்வரம் மற்றும் வட மாநிலங்களுக்கும் கடலூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடலூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி நேற்று காலை கடலூர் முதுநகரிலிருந்து ஒரு இன்ஜின் மற்றும் 4 பெட்டிகள் கொண்ட ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த ரயிலானது கடலூர் முதுநகரில் இருந்து விருத்தாசலம் வரை மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்றனர். இந்த சோதனை ஓட்டத்தில் எந்தவித தடங்களும் ஏற்படவில்லை என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.