கரூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தொடர் தகவல் வந்தவண்ணம் இருந்திருக்கிறது. அதுவும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, கரூரில் விற்பனை செய்வதாக தெரியவந்தது. இந்தக் காரியத்தை தலைமையேற்று, கரூரை அடுத்த மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்கின்ற கந்தசாமி செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவனைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு நீண்டகாலமாக டிமிக்கி கொடுத்துவந்த கந்தன், தற்போது போலீஸாரிடம் வசமாக மாட்டியிருக்கிறான். அவன் மட்டுமின்றி, அவர் நண்பர்கள் ரூபன்ராஜ், சென்றாயன், கவாஸ்வர், ஜீவானந்தம், கஸ்தூரி என்ற பெண் உட்பட 6 நபர்களும் சிக்கியிருக்கின்றனர். ஈச்சர் லாரி மூலம் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, கரூரில் விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில், கரூர் மாநகரப் பகுதிக்குட்பட்ட பெரிய ஆண்டாங்கோவில் ரோடு, பெரியார் வளைவு மேம்பாலம் அருகே 44 கிலோ எடை கொண்ட கஞ்சாவை விற்பனைக்காக ஈச்சர் வாகனத்திற்குள் அமர்ந்து சிறு, சிறு பொட்டலங்களாக போட்டுக் கொண்டிருந்தபோது, சைபர் க்ரைம் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் குழுவினர் மற்றும் நகர காவல் போலீஸார் உடன் நேரில் சென்று கஞ்சா பொட்டலங்கள் போட்டுக் கொண்டிருந்த 6 நபர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவர்களிடமிருந்து 44 கிலோ கஞ்சா, ஒரு ஈச்சர் வாகனம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதோடு, கஞ்சா விற்பனை செய்த அந்த ஆறு நபர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.