– நமது சிறப்பு நிருபர் –
கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான கொள்கையை உருவாக்குவதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகத்தை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டுறவுத் துறையையும் கவனிக்கிறார்.’கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவில் கொள்கை உருவாக்கப்படும்’ என, அமித் ஷா ஏற்கனவே கூறியிருந்தார்.இந்நிலையில், 47 உறுப்பினர்கள் உடைய நிபுணர் குழுவை அமைத்து, கூட்டுறவுத் துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது நாடு முழுதும், 8.5 லட்சம் கூட்டுறவு சங்கங்களில், 29 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயம், பால் தொழில், மீன்வளம், வீட்டு வசதி என பல துறைகளில், இந்த சங்கங்கள் இயங்கி வருகின்றன.கூட்டுறவுத் துறைக்காக, 2002ல் தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, கூட்டுறவுத் துறையை வலுவான ஒரு அமைப்பாக மாற்றும் வகையில், தேசிய அளவில் கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படும்.இந்த கொள்கையை உருவாக்குவதற்காக, முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவில் கூட்டுறவுத் துறை நிபுணர்கள், தேசிய – மாநில – மாவட்ட – தொடக்க கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், மாநிலங்களின் கூட்டுறவுத் துறை செயலர்கள், மத்திய அமைச்சகங்களின் உயரதிகாரிகள் இடம்பெறுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement