புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலத்தில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவர், சமீபத்தில் புதுடில்லியில் கைது செய்யப்பட்டனர். இருவரும் 2016ம் ஆண்டு முதல் நம் நாட்டில் தங்கியுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.அவர்கள் அளித்த வாக்குமூலப்படி, உ.பி., தலைநகர் லக்னோவில் ஒரு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 312.5 கிலோ, ‘மெத்தம்பேட்டமைன்’ மற்றும் 10 கிலோ ஹெராயின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு 1,200 கோடி ரூபாய். புதுடில்லி குற்றப் பிரிவு போலீஸ் மற்றும் குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் படை ஆகியவை இணைந்து புதுடில்லி வசந்த்குஞ்ச் பகுதியில் 4ம் தேதி நடத்திய சோதனையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த மேலும் ஒருவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.சமீபத்தில், கோவாவில் மர்மமான முறையில் இறந்த பா.ஜ.,வை சேர்ந்த நடிகை சோனாலி போஹத் குடித்த பானத்தில், மெத்தம்பேட்டமைன் கலந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது, நரம்பு மண்டலத்தில் மிக அதிக போதையை ஏற்படுத்தக்கூடியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement