சென்னை: வள்ளலார் முப்பெரும் விழாவைசிறப்பாக நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வள்ளலார் தருமசாலையை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்கம், வள்ளலார் பிறந்த 200-வது ஆண்டு தொடக்கம், ஜோதிதரிசனம் காட்டுவித்த 152-வதுஆண்டு என மூன்று நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, வள்ளலாரின் 200-வது பிறந்த ஆண்டான 2022 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரை 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா நடத்தப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக நடத்த டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர்கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் கூட்டம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துறை ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது.
இதில், முப்பெரும் விழாவை 52 வாரங்களுக்கு சிறப்பாக நடத்துவதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. குறிப்பாக, விழாவுக்கான இலச்சினையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், வரும்அக்டோபர் 5-ம் தேதி தொடக்கநிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், வள்ளலாரின் முப்பெரும் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர்ஸ்டாலின் தலைமையில் சென்னைதலைமைச் செயலகத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் இறையன்பு, பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையிலான 14 பேர் கொண்ட சிறப்பு குழுவினர், அறநிலையத் துறை செயலர்பி.சந்திரமோகன், துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு குழுவின் முதல் கூட்டத்தில் வகுக்கப்பட்ட செயல் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது. விழாவை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.