புதுடில்லி கேரளாவின் திருச்சூர், நிலாம்பூர் ஆகிய நகரங்களை, சர்வதேச அளவிலான கற்றல் நகரங்கள் பட்டியலில், ஐக்கிய நாடுகள் சபையின் ‘யுனெஸ்கோ’ அமைப்பு இணைத்துள்ளது. ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, பல்வேறு நாடுகளில் உள்ள நீண்ட கால கற்றல் முறையை ஊக்குவிக்கும் வகையில், அவற்றில் சிறப்பாக செயல்படும் நகரங்களை அங்கீகரித்து வருகிறது. இவ்வாறு அங்கீகரிக்கப்படும் நகரங்கள், சர்வதேச அளவிலான கற்றல் நகரங்களின் பட்டியலில் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தப் பட்டியலில், தற்போது 44 நாடுகளைச் சேர்ந்த, 77 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.நம் நாட்டிலிருந்து, தெலுங்கானாவின் வாரங்கல், கேரளாவின் திருச்சூர், நிலாம்பூர் ஆகிய நகரங்கள், இந்த பட்டியலில் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவ், தென் ஆப்ரிக்காவின் டர்பன், ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜா ஆகிய நகரங்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.இதன் வாயிலாக, இந்த பட்டியலில், இதுவரை மொத்தம் 76 நாடுகளைச் சேர்ந்த, 294 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து, யுனெஸ்கோ இயக்குனர் ஆட்ரி அசோலே கூறுகையில், ”உலகின் மொத்த மக்கள் தொகையில், 50 சதவீதம் பேர் நகரங்களில் வசிக்கின்றனர். ”கற்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளை நீண்ட காலம் தொடர்ந்து மேற்கொள்வதில், நகரங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே தான், கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் நகரங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement