லண்டன்: பிரிட்டனின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் (47) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூலையில் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பல்வேறு கட்டங்களாக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. முதல் 5 சுற்று தேர்தலில் கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்தனர். 8 பேர் போட்டியிட்ட நிலையில் 5-வது சுற்றில் லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் மட்டும் களத்தில் இருந்தனர்.
இறுதிகட்டமாக கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொத்தம் 1.72 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் லிஸ் ட்ரஸுக்கு 81,326 வாக்குகளும் ரிஷி சுனக்குக்கு 60,399 வாக்குகளும் கிடைத்தன. அதிக வாக்குகள் பெற்ற லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று இறுதி உரையாற்றினார். ராணி எலிசபெத் ஸ்காட்லாந்தின் பால்மோரா அரண்மனையில் தங்கியிருப்பதால் லண்டனில் இருந்து விமானம் மூலம் ஸ்காட்லாந்துக்கு சென்ற அவர், ராணியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதற்கிடையில் லிஸ் ட்ரஸ் தனி விமானத்தில் லண்டனில் இருந்து நேற்று ஸ்காட்லாந்துக்கு சென்றார். அங்கு அபெர்டின்ஷையர் பகுதியில் அமைந்துள்ள பால்மோரா அரண்மனைக்கு வாகனங்கள் புடைசூழ காரில் சென்ற அவர், ராணி எலிசபெத்தை சந்தித்தார். அரண்மனையில் நடைபெற்ற விழாவில் பிரிட்டனின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அங்கிருந்து விமானத்தில் லண்டன் திரும்பிய லிஸ் ட்ரஸ் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இல்லத்தில் குடியேறினார்.
ஸ்காட்லாந்தில் பதவியேற்பு ஏன்?
பிரிட்டனின் ஒருங்கிணைந்த பகுதியான ஸ்காட்லாந்தில் பிரிட்டன் அரச பரம்பரைக்கு சொந்தமான பால்மோரா அரண்மனை உள்ளது. அங்கு ராணி எலிசபெத் கோடை விடுமுறையை கழிப்பது வழக்கம். இதன்படி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக பால்மோரா அரண்மனைக்கு ராணி சென்றார். அவரது உடல்நிலை மோசமானதால் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
பிரிட்டனின் புதிய பிரதமர் பதவியேற்கும் விழா லண்டனில் அமைந்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறுவது வழக்கம். ராணி எலிசபெத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போரிஸ் ஜான்சன் ஸ்காட்லாந்து சென்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதேபோல லிஸ் ட்ரஸ் ஸ்காட்லாந்தின் பால்மோரா அரண்மனைக்கு சென்று புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.