புதுடெல்லி: வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
2022-23 நிதி ஆண்டுக்கு, நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறையாக 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடி வழங்க 15-வது நிதிக் குழு பரிந்துரைத்தது. அதன்படி, இந்தத் தொகை 12 மாதத் தவணையாக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 6-வது தவணையாக செப்டம்பர் மாதத்துக்கு ரூ.7,183 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உட்பட 14 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை மத்திய செலவினத் துறை விடுவித்துள்ளது. அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்கு இதுவரையில் ரூ.43,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டம் 275 அடிப்படையில், நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருமானப் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வுக்கு பிறகு மாநிலங்களின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிட்டு வருவாய் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களை நிதிக் குழு பரிந்துரை செய்யும். பரிந்துரை செய்யப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய செலவினத் துறைஒவ்வொரு ஆண்டும் 12 தவணைகளில் மானியம் வழங்கும்.
2022-23-ம் நிதி ஆண்டுக்கு ஆந்திரா, அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.