திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜ் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் கலந்து கொண்டார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
மணமக்களை வாழ்த்திய பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர் காலத்தில் திண்டுக்கல் அதிமுக கோட்டையாக இருந்தது. அது ஜெயலலிதா காலத்தில் எக்கு கோட்டையாக உருவானது. நான் பொறுப்பேற்றது முதல் இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் போராட்டம் தான். போராட்டத்தை தாண்டி வெற்றியை பெற்றுக் கொண்டு இருக்கிறேன்.
அதிமுக வலிமையுடன், பொலிவோடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை பல பேர் பிளக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. ஏனென்றால் இது மக்கள் சக்தி உள்ள இயக்கம். ஜெயலலிதாவுக்கு வழிகாட்டலில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதிமுக ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்தோம். மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து நிறைவேற்றினோம். அப்போது மக்களாட்சி நடைபெற்றது. தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி போதைப் பொருள் விற்பனை நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. திறமையற்ற முதலமைச்சர் இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். விரைவில் உங்கள் மூலமாக நல்ல பதில் வர வேண்டும்” என்றார்.