டெல்லி ஜே.என்.யூ-வில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை; ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழக அரசு அரசாணை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

புதுடெல்லியிலுள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, உருதுப் பிரிவு, இந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னட மொழி இருக்கை, ஓடிய மொழி இருக்கை, வங்க மொழி இருக்கை, ஆகிய அமைப்புகளைக் கொண்டு இயங்குகின்றது. பல்கலைக்கழக நல்கைக்குழு வாயிலாக பேராசிரியர் ஒருவரும் தமிழ்நாடு அரசின் நிதி நல்கையின் வாயிலாக உதவிப் பேராசிரியர் ஒருவரும் நியமனம் பெற்று 2007 முதல் பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: சிவாஜி சிலையை அரசு திறக்கவில்லை என்றால் நானே திறப்பேன் – சீமான்

தமிழ் இலக்கிய ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூக ஆய்வு என மூவகையாக விரிவுபடுத்தி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு இனி, தமிழ் இலக்கியவியல் எனும் தனித் துறையாக முகிழ்த்து எழச் செய்துள்ளது தமிழக அரசு. இதற்கென ரூ.5 கோடி நிதி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

உலகெங்கும் தமிழின் ஆய்வுத் தொன்மையை நிலைநாட்டும் ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவித்து வரும் தமிழக முதல்வர், தமிழ் வளர்ச்சிக்கான தனிப்பெரும் விழைவின் அடையாளமாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சாந்தி ஸ்ரீ பண்டிட், ஆசிரியர் தினத்தன்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் “தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தாங்கள் செய்கின்ற மாபெரும் தொண்டாகக் கருதுகிறேன் என்றும் தமிழைத் தமிழைக் கொண்டவர் என்ற முறையிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எந்த முறையிலும் முதல்வரின் இந்த முன்னெடுப்பு மிகுந்த பெருமையை அளிக்கிறது என்றும் பல்கலைக்கழகத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த தமிழ் வாழ்க” எனத் தெரிவித்துள்ளார்.

தனிப்பெரும் துறையாக உருவெடுக்கும் தமிழ் இலக்கியத் துறை வாயிலாக ஒப்பாய்வு, முதுகலை தமிழிலக்கியப் படிப்பு, வல்லுநர்வழி மொழியாக்கம், விருந்துநிலைப் பேராசிரியர் வழி ஆய்வுப் பெருந்திட்டம், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தமிழாசிரியர்களுக்கு ஆய்வுப் பயிலரங்கம், அயலகப் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல், தரமான நூல்களை வெளியிடுதல், ஜே.என்.யூ தமிழியல் எனும் பெயரில் 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த் துறையாகவும் தமிழாய்வுகளை விரைந்து விரிந்தும் செய்யும் பெருமிதமும் தனித்தியங்கும் தன்மையையும் கொண்டு உலக அளவில் கவனம் பெறும் துறையாக தமிழ் இலக்கியவியல் துறை மாறும் எனவும் தமிழ்ச் சான்றோர்களும், தமிழார்வலர்களும் கருதுகின்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.