சென்னை : பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இசை வெளியீட்டுக்காக பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு, செண்டை வாத்தியங்கள் முழங்க, சிவப்பு கம்பள விரிப்பில் நடிகர்கள் அரங்குக்கு வந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிட்டார்.
எம்ஜிஆரின் ஆசை
பின்னர் விழாவில் பேசிய கமல், இந்த படத்தை எடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர் எம்.ஜி.ஆர்தான் அதற்காக அவர் பல முயற்சிகளை செய்தார்.ஆனால், பின்நாளில் அது கைவிடப்பட்டுவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தின் ரைட்ஸ் எம்.ஜிஆரிடம் தான் இருந்தது. அவரிடம் இருந்து இந்த படத்தின் ரைட்சை நான் வாங்கிய போது எம்ஜிஆர் இந்த படத்தை சீக்கிரம் எடுத்து முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், என்னால் எடுக்க முடியாமல் போனது. இப்போது மணிரத்தினம் இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
வந்தியத்தேவனாக நடிக்க ஆசை
மேலும், எனக்கும் ரஜினிக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நான் நடிக்க ஆசையாக இருந்தது. ஆனால், சிவாஜி அவர்கள் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ரஜினிக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்றும், உனக்கு அருண்மொழிவர்மன் வேடம் சரியாக இருக்கும் என்றார். ஆனால், இது நடக்காமல் போனது. இப்போது இந்த கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார் பெருமையாக இருக்கிறது என்றார்.
வெற்றி பெறும்
தொடர்ந்து பேசிய கமல், பாலிவுட்டில் வெளியான சோலே போன்ற படங்களில் தமிழ் சினிமாவில் வராதா என்று நான் பலமுறை நினைத்து இருக்கிறேன் அதற்கான பதில் தான் இந்த பொன்னியின் செல்வன். நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மணிரத்னம் அவர்களின் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
ரஜினியா? கமலா?
மேலும், சினிமா என்பது ஒரு சிறிய குடும்பம் இங்கு பொறாமைபடுவதற்கு யாருக்கும் நேரம் இல்லை. போட்டி இருக்கும் ஆனால் பொறாமை இருக்காது இந்த விஷயத்தை ரஜினியும் நானும் முன்பே முடிவு செய்துவிட்டோம் இதனால் தான் இந்த இடத்தில் இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றார். விக்ரம் பட வெற்றிக்கு பிறகு ரஜினியா? கமலா? இணையத்தில் வரும் சண்டையை மனதில் வைத்தே கமல் இவ்வாறு பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.