நாடக உலகின் இமயமலை என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாள் இன்று.
`தமிழ் நாடகக் கலையின் தந்தை’ என்றழைக்கப்படும் அளவுக்கு, தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன் அவரது காலத்துக்குப் பின் என பிரித்துப் பார்க்கும் அளவுக்கு தமிழ் நாடகங்களில் அவரது பங்களிப்பு மகத்தானது. தூத்துக்குடியை அடுத்துள்ள காட்டுநாயக்கன்பட்டியில் 1867ஆம் ஆண்டு இதே நாளன்று பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
நாடகத்தில் நடிக்க நடிப்பும், இசையும் பாட்டுத்திறமையும் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட காலம் அது. அதற்காக புதுக்கோட்டை மான் பூன்டியா பிள்ளை என்பவரிடம் இசைப்பயிற்சியைப் பெற்றார், சங்கரதாஸ், இலக்கண இலக்கியங்களை தனது தந்தையிடமே கற்றுக்கொண்ட பின்னர்தான் முழு நேர நடிப்பில் ஈடுபட்டார். இதனாலேயே அவரது நாடகங்கள் செழுமையான மொழி வளத்துடன் விளங்கின.
தான் ஏற்கும் கதாபாத்திரமே மாறி ரசிகர்களை மெய்மறக்கச் செய்து ரசிகர்களை கட்டிப்போடும் ஆற்றல் பெற்றிருந்த சங்கரதாஸ் சுவாமிகள், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு நாடகங்களை எழுதி இயக்குவதோடு தனது பங்களிப்பை சுருக்கிக் கொண்டார். சங்கரதாஸ் சுவாமிகள் எழுதி இயக்கியிருக்கும் 60க்கும் மேற்பட்ட நாடகங்களில் வீர பாண்டிய கட்டபொம்மன், சத்தியவான் சாவித்திரி, மதுரை வீரன், வள்ளி திருமணம், பவளக்கொடி சரித்திரம், நள தமயந்தி போன்றவை அவருக்கு புகழையும் பெருமையையும் தேடித்தந்தன. இதில் பெரும்பாலானவை திரைப்படமாக எடுக்கப்பட்டன.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் அந்தக் காலத்திலேயே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதன் வாயிலாகவே அவரது ஆங்கிலப் புலமையை அறிந்துகொள்ள முடியும். தனது வாழ்க்கையை நாடகக் கலைக்காக முற்றிலும் அர்ப்பணித்த சங்கரதாஸ் சுவாமிகள், அதற்காக திருமணமே செய்து கொள்ளவில்லை.
தமிழ் நாடக மேடைகளுக்கு தனது அசாத்திய உழைப்பின் மூலம் பெரிய அளவில் மரியாதையை ஏற்படுத்தித் தந்த சங்கரதாஸ் சுவாமிகள், தமிழ்நாடெங்கும் சுற்றி வந்து கலைச்சேவை ஆற்றினார். விழுப்புரத்தில் ஒரு நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, பின் இயற்கை எய்தினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM