தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள ஞானியார்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி. இவரின் மனைவி வாசுகி. இவர்களுக்கு அமுதா என்பவர் உட்பட 6 மகள்கள் மற்றும் 4 மகன்கள் என 10 குழந்தைகள். இதில், 2 மகன்கள் இறந்து விட்டனர். அமுதா மற்றும் அவரின் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை. மற்றவர்கள் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்கள். ஆறுமுகபாண்டி, தனது மகள் அமுதாவின் 5 பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்துள்ளார். அடகு வைத்து அந்த பணத்தில் சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயபுரம் கிராமத்தில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
ஆறுமுகபாண்டியும் மகளும் தோட்டத்திலேயே தங்கியிருந்து தோட்ட வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், அடகு வைத்த நகையை திருப்பித்தர வேண்டும் என கடந்த 5 மாதமாக தந்தையிடம் கேட்டு வந்தாராம். நகையை மீட்டுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் ஆறுமுகபாண்டி காலம் தாழ்த்தி வந்துள்ளாராம். இதுதொடர்பாக தந்தை, மகளிடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பும் நகையை மீட்பது தொடர்பாக தகராறு ஏற்பட, தந்தையின் பைக் சாவியை எடுத்து வைத்துகொண்டு நகையைக் கொடுத்துவிட்டு சாவியை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளாராம்.
அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியதால், கோபத்தில் ஆறுமுகபாண்டியின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகப்படியாக வெளியேறியுள்ளது. இதனையடுத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி செய்யப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலை உயிரிழந்தார். இதையடுத்து சாத்தான்குளம் காவல்நிலைய போலீஸார் அமுதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். “ஓலைக்கொட்டகையில் செருகி வைத்திருந்த அரிவாள் கட்டிலில் படுத்திருந்த தந்தையின் தலையில் விழுந்து வெட்டுக்காயம் ஏற்பட்டுடுச்சு” எனச் சொல்லியுள்ளார். ஆனால், ஆறுமுகபாண்டியின் தலையில் பட்டுள்ள வெட்டுக்காயம், அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், அமுதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ”அடகு வச்ச 5 சவரன் நகை மீட்டுத்தரச் சொல்லி சொன்னேன். நாலஞ்சு மாசமாச் சொல்லியும் அவர் கேட்கலை. அவர் கையில பணம் வச்சிருந்தும் நகையை மீட்டுத் தரலை. இது சம்மந்தமா எனக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம் வந்துச்சு. என் கையில இருந்து பைக் சாவியை பிடுங்கினார். கோவத்துல அப்பாவோட தலையில அரிவாளால் வெட்டினேன்” எனச் சொல்லியுள்ளார். இதனையடுத்து போலீஸார் அமுதாவைக் கைது செய்தனர். அடகு நகைப் பிரச்னையில் பெற்ற தந்தையையே மகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.