வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், இனிமேல் காரின் பின் இருக்கையில் அமர்வோரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் எனவும், அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான சைரஸ் மிஸ்த்ரி, 54, கடந்த 4ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இருந்து மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு காரில் வந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். மும்பை வோர்லி மயானத்தில், சைரஸ் மிஸ்த்ரி உடல் தகனம் செய்யப்பட்டது. விபத்து நடந்த போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்த்ரி சீட் பெல்ட் அணியவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அளித்த பேட்டி: காரின் பின் இருக்கையில் அமர்வோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், பலர் அதனை பின்பற்றுவது கிடையாது. இனிமேல் பின் இருக்கையில் அமர்வோர் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். எந்த விலை கொடுத்தாவது உயிர்கள் காப்பாற்றப்படவேண்டும்.
அபராதம் விதிப்பது நோக்கமல்ல. ஆனால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். 2024க்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதம் விதிக்கும் விஷயத்தில் மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்கும்.
பல இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், விதிமுறைகள் மீறப்பட்டால் கண்டுபிடிக்க முடியும். கார்களில் ஏர்பேக்குகள் பொருத்தப்படுவதில், செலவை விட உயிர் காப்பாற்றுவது முக்கியம். சாலை பாதுகாப்பு குறித்து பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு கட்காரி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement