‘இந்த ரோல் எனக்கு தாங்கனு கேட்டேன்.. ஆனா மணி மறுத்துவிட்டார்’ – ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்

‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் தான் நடிக்க கேட்டபோது இயக்குநர் மணிரத்னம் மறுத்துவிட்டதாக சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது ‘பொன்னியின் செல்வன்’. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பலரும் நடித்துள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்றிரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் இயக்குநர் ஷங்கர், கௌதம் மேனன், மிஷ்கின், லிங்குசாமி, தரணி, ராதா மோகன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், தேணான்டாள் முரளி, நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, துருவ் விக்ரம், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த், கிஷோர், நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, அதிதி ராவ் ஹைதரி, அக்ஷரா ஹாசன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், கலை இயக்குநர் தோட்டா தரணி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத், தயாரிப்பாளர் ‘லைகா’ சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

image

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “எங்கிருந்து இந்த சரித்திரத்தை துவங்குவது எனத் தெரியவில்லை. எனக்கும் ரஜினிக்கு இருக்கும் உறவு ஒரு தனிக்கதை, எனக்கும் மணிக்கும் ‘பொன்னியின் செல்வனுக்குமான’ உறவு தனிக்கதை. மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்த நாவலின் உரிமையை வாங்கி வைத்திருந்தார். பிறகு நான் கேட்கும் போது கொடுத்தார். ஒரு உபதேசம் மட்டும் சொன்னார். சீக்கிரம் எடுத்துவிடு என்று. அது ஏன் என அப்போது புரியவில்லை. ஆனால் சில வருடத்தில் இந்த நாவல் நாட்டுடமை ஆக்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று மாறியது சற்று வருத்தம் தான். இந்தப் நாவலின் உரிமையை வாங்கிய பின் சிவாஜி அவர்களை சந்தித்த போது, பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்கவை எனக் கூறினார். அவ்வளவு கனவுகள் இருந்தது. ஆனால் அதை எடுத்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதம், வைராக்கியம் மணிரத்தினத்திற்கு இருந்தது. அதைப் பாராட்டியே ஆக வேண்டும். ‘ஷோலே’ வந்த போது, இது மாதிரி எல்லாம் தமிழில் படம் வருமா என பேசிக் கொண்டிருப்போம். அது தான் இது” என்று கூறினார்.

விழாவில் ரஜினி பேசுகையில், “இந்த நிகழ்வுக்கு என்னுடைய வாழ்த்துகள். கமலின் ‘விக்ரம்’ வெற்றி பெற்றதற்கு அவருக்கும் வாழ்த்துகள். இந்த விழாவில் மூன்று கதாநாயகர்கள், ஒன்று அமரர் கல்கி அவர்கள், ரெண்டாவது தயாரிப்பாளர் சுபாஷ்கரன், மூன்றாவது இயக்குநர் மணிரத்னம். 70 ஆண்டுக்கு முன் எழுதப்பட்டது, ஐந்தரை ஆண்டுகளாக தொடராக வந்தது ‘பொன்னியின் செல்வன்’. வாராவாரம் வெளியாகும் இந்த தொடரைப் படிக்க, ஃபர்ஸ்ட் ஷோ படம் பார்க்க போகும் ஆவலுடன் காத்திருப்பார்கள் வாசகர்கள். இந்தப் படம் பலரும் முயன்று எடுக்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன என்று யோசிப்பேன். ஒரே படத்தில் முழுக் கதையும் சொல்லும் சவால் இருந்தது எனத் தோன்றும். ஆனால் அந்த சவாலை மணிரத்னம் சாதனையாக மாற்றி இருக்கிறார்.

image

மணிரத்னம் என்றவுடன் எனக்கு ‘தளபதி’யில் நடித்த நினைவுகள் வருகிறது. அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது, எனக்கு மேக்கப் போட வேண்டாம் எனக் கூறியிருந்தார். ஆனால் என்னுடன் இணைந்து நடிக்கப் போவது மம்மூட்டி. நல்ல கலரான நடிகர். அவர் உடன் நிற்கும் போது என்னுடைய முகம் தெரியாமல் போய்விடும். அந்த பயத்தில் மேக்கப் போட சொன்னேன். அவர்கள் கொடுத்த காஸ்ட்யூம், செருப்பு எதையும் போடாமல், ஷூ ஸ்டைலான காஸ்ட்யூம் அணிந்து சென்றேன். ஷூட் துவங்காமல் எல்லோரும் குழுவாக நின்று மணிரத்னத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் என்ன பேசுகிறார்கள் எனக் கேட்டேன். உங்களுக்கு பதிலாக கமலை நடிக்க வைக்கலாம் எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். அடுத்த நாளில் இருந்து நான் மேக்கப் போடுவதில்லை.

நடிப்பு பொருத்தவரை ஸ்டாக் ஆக்டிங், காதல், நட்பு, பாசம் என டிஃபால்ட்டாக ஒரு நடிப்பு என்னிடம் இருக்கும். வழக்கம் போல் அதே நடிப்பை இதில் வெளிப்படுத்த, மணிரத்னம் எதையும் ஓகே செய்யாமல் டேக் எடுத்துக் கொண்டே இருந்தார். நான் கமலுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே “எனக்குத் தெரியும் இப்படி நடக்கும் என்று. நீங்கள் மணிரத்னத்தை நடித்துக் காட்ட சொல்லி, கொஞ்ச நேரம் யோசிப்பதைப் போல இருந்து விட்டு மணி செய்ததை அப்படியே செய்யுங்கள். ஓகே ஆகிவிடும்” என்றார். இப்படித்தான் நானும் கமலும் மணிரத்னத்தை ஏமாற்றினோம்.

‘பொன்னியின் செல்வன்’ என்றதும் எனக்கு ஒரு குட்டி கதை ஞாபகம் வருகிறது. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் எதுவாக இருந்தாலும் எத்தனை பக்கம் எனக் தெரிந்து கொள்ள விரும்புவேன். ‘பொன்னியின் செல்வன்’ வந்த காலகட்டத்தில், அதைப் படித்தீர்களா, படித்தீர்களா எனப் பலரும் கேட்டார்கள். நானும் படிக்கலாம் என விரும்பி வழக்கம் போல் எத்தனை பக்கம் என்று கேட்டேன். பக்கமா அது ஐந்து பாகங்கள், 2000 பக்கங்களுக்கு மேல் என்றார்கள்.

image

முன்பெல்லாம் அரசு பதில்கள் என்ற பகுதி வரும். அதில் ஒரு வாசகர் பொன்னியின் செல்வனைப் படமாக எடுத்தால் யாரை வந்தியத் தேவனாக நடிக்க வைக்கலாம் எனக் கேட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கான பதிலை எழுதிய ஜெயலலிதா, ரஜினி என சொல்லியிருந்தார். பிறகு நான் பொன்னியின் செல்வன் படித்த பின்பு யாரெல்லாம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என ஒரு யோசனையும் செய்தேன். நான் வந்தியத்தேவன், நந்தினி – ரேகா, குந்தவை – ஸ்ரீதேவி, பழுவேட்டரையர் – சத்யராஜ், ஆதித்ய கரிகாலன் – விஜயகாந்த் என ஒரு யோசனை. ஆனால் அது நடக்கவில்லை.

உண்மையில் பொன்னியின் செல்வனில் முதன்மைக் கதாபாத்திரம் என்பது அருள் மொழி வர்மன் கிடையாது, நந்தினி. இது பொன்னியின் செல்வி என்றுதான் இருந்திருக்க வேண்டும். அற்புதமான கதாபாத்திரம். நந்தினி இன்ஸ்பிரேஷனில் தான் நீலாம்பரி கதாப்பாத்திரத்தை படையப்பாவில் வைத்தேன். இந்தப் படத்தை மணிரத்னம் துவங்கும்போது படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை எனக்குக் கொடுங்கள் எனக் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், “சிலருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படைப்பை தந்த அமரர் கல்கிக்கு முதல் நன்றி. அடுத்தது தயாரிப்பாளர் சுபாஷ்கரன். ‘செக்கச் சிவந்த வானம்’ படம் முடித்திருந்த சமயத்தில் அடுத்து என்ன படம் என்று கேட்டார். அப்போது ‘பொன்னியின் செல்வன்’ என்று சொன்னேன். பண்ணிடலாம் என்றார். இரண்டே நிமிடத்தில் இந்த ப்ராஜெக்ட் முடிவானது. படம் ‘பாகுபலி’ மாதிரி இருக்குமா என்றார், இல்லை என்றேன். அப்போ சஞ்சய் லீலா பன்சாலி படம் மாதிரி இருக்குமா என்றார், இல்லை என்றேன். பிறகு எப்படிதான் இருக்கும் என்றார், கல்கி எழுதின மாதிரி இருக்கும் என்றேன். அதைத்தான் இதில் முடிந்த வரை முயற்சித்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

image

வரவேற்புரையில் பேசிய தமிழ்குமரன் ” ‘பொன்னியின் செல்வன்’ நாவல் எவ்வளவு சிறப்புமிக்கது எனத் தெரியும். அதே போல் சிறப்பு மிக்கது இந்த இசைவெளியீட்டு நிகழ்வு இது. காவிய நாயகர்களை நம் கண்முன் கொண்டு வந்து, இன்னொரு வைரக்கல்லை கல்கியின் கீரிடத்தில் வைத்திருக்கிறார் மணிரத்னம். ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டியது. இதன் மூலம் வரலாறு படைக்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். அண்ணா எழுத்தில் எம்.ஜி.ஆர் இந்த நாவலை படமாக மாற்ற நினைத்தார், திரைஞானி கமல்ஹாசனும் முயற்சித்தார். இது போல பலரும் முயற்சித்தது மணிரத்னம் – சுபாஷ்கரன் அவர்களால் கைகூடியிருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசுகையில், “மணிரத்னம் மலையாளத்தில் ‘உணரு’ படம் இயக்கினார். அந்தப் படம் பார்த்துவிட்டு அவருடன் பணிபுரிய விரும்பினேன். அவ்வளவு அருமையாக படைப்பாளி அவர்” என்று தெரிவித்தார்.

தேணான்டள் முரளி கூறுகையில், “இந்தப் படம் வரலாற்றில் மிக முக்கியமானது. இந்த நேரத்தில் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை. ‘பொன்னியின் செல்வன்’ மாதிரி மிக முக்கியமான படைப்புக்கு வரிவிலக்கு அளிக்கும் படி கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக வைக்கிறேன்”

ஜெயமோகன் பேசுகையில், “இதேபோன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற டீசர் வெளியீட்டு நிகழ்வில், இந்தப் படத்திற்குப் பிறகு சோழர்களின் வரலாறு உலகம் முழுக்க அறியப்படும் எனக் கூறினேன். சமீபத்தில் இந்தோனேஷியாவில் இருந்து ஒருவர் அழைத்து, சோழா சோழா பாடல் இந்தோனேஷியாவில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றார். கண்டிப்பாக படம் வெளியானதும் உலகமே பெரிய வரலாற்றைத் தெரிந்து கொள்ளும்” என தெரிவித்தார்.

image

எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன் பேசுகையில், “வரலாற்றின் என்றும் ருசி மறையாது. அதில் தான் நம்மால் மூன்று காலத்தையும் ஒரு சேர தெரிந்து கொள்ள முடியும். அதிகாரத்தைப் பிடிக்க நடக்கும் சதி எல்லா வரலாற்றிலும் இருக்கும். அதிகாரம் இருக்கும் வரை சதி இருக்கும். அதைப் பதிவு செய்வது வரலாறுதான். அப்படியான வரலாறுதான் ‘பொன்னியின் செல்வன்’, அதில் தமிழர்களின் பெருமையும் சொல்லப்பட்டிருக்கும். பேரலையானாலும் சிற்றலையானாலும் நிலவை அது பிரதிபலிக்கும். அதே போல் எல்லா கதாபாத்திரமும் கல்கியால் ஒளியூட்டப்பட்ட நாவல் இது. அரசர்களை மட்டும் நம்பியதில்லை வரலாறு, ஒவ்வொரு மனிதர்களையும் உள்ளடக்கியது. இந்த ஆண்டு பொன்னிநதி பெருக்கெடுத்து ஓடுவது போல் பொன்னியின் செல்வனும் ஓடும்” என கூறினார்.

நடிகரும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் திரைக்கதையாசிரியருமான இளங்கோ குமரவேல் பேசுகையில், “யாரையெல்லாம் ரசித்தேனோ அவர்கள் முன்னால் இன்று நிற்கிறேன். இந்த நாவலை திரைப்படமாக மாற்றுவது பல தலைமுறையின் கனவு. அதை இயக்குநர் மணிரத்னம் நினைவாக்கியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

நடிகர் நாசர் கூறுகையில், “70 ஆண்டுக்கும் மேலாக இந்த பொன்முட்டை காத்துக் கொண்டிருந்தது. 1950-களில் எழுதப்பட்ட நாவல், திரைப்படமாக இப்போது மாறியிருக்கிறது. அதுவும் மிக சரியான கைகளின் மூலம் அது நடந்திருக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தில் நடித்திருக்கிறேன். ரஜினி – கமல் அந்த நாடகத்தைப் பார்க்க வருவார்கள். அதில் நான் ஆதித்த கரிகாலனாக நடித்தேன். அதில் நடிக்கும் போது ஒரு 500 ஆண்டுக்கு முன் சென்று வந்தது போல் உணர்வேன். இந்தப் படத்தை ஒரு சகாப்தம் முடிந்து இன்னொரு சகாப்தம் துவங்குவதாக பார்க்கிறேன். இதுவரை நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தங்கள் கற்பனையில் பார்த்திருப்பார்கள். ஆனால் இனிமேல் ஐஸ்வர்யா ராய் தான் நந்தினி, கார்த்திதான் வந்தியத்தேவன், ஜெயம் ரவி தான் பொன்னியின் செல்வன். இப்படி மாறப்போகும் சகாப்தத்திற்குள் நுழையப்போகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

imageநடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில் “எல்லாம் பழசாகிறது. போன வாரம் வந்தப் படம் இந்த வாரம் பழையதாகிறது. ஆனால் 54-ல் எழுதப்பட்ட நாவல் இன்னும் இளமையாக இருக்கிறது. ஒருவேளை கல்கி இருந்திருந்தால், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, மணிரத்னத்துக்கு கைதட்டி பாராட்டி இருப்பார். எனக்குத் தெரிந்து சுஹாசினிக்கு முன்னாலேயே ஒருவரைக் காதலித்திருக்கிறார். அது பொன்னியின் செல்வன் என நினைக்கிறேன். அப்படி அவருடைய கனவுப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரி படமெல்லாம் நடித்திருக்கிறோம், நன்றாக தமிழ் தெரியும் என்று நினைத்துக் கொண்டு, வசனங்களை தூய தமிழில் பேசினேன். ஆனால் இப்படியெல்லாம் பேசக் கூடாது என மணிரத்னம் என்னை மட்டம் தட்டினார். மட்டம் தட்டினார் என்பதை தவறாக சொல்லவில்லை. கட்டடம் கட்டுவதில் மட்டப் பலகையை பயன்படுத்துவார்கள். அது தளத்தை சமன்படுத்தும். அப்படி என்னை சரிசெய்திருக்கிறார்” என கூறினார்.

“ஆழ்வார்க்கடியான் தம்பியாக நடித்தது இந்த ஜென்மத்து புண்ணியம்” என்ற நடிகர் ஜெயராம், படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் மணிரத்னம், ஜெயம்ரவி ஆகியோரைப் போல மிமிக்ரி செய்ய அரங்கமே அதிர்ந்தது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசுகையில், “இல்லை என்ற வார்த்தை மணிரத்னத்திற்கு பிடிக்காது, எனக்கும் தெரியாது. எல்லோருக்கும் பிடித்தக் கதையை, பிடித்த மாதிரியே எடுத்திருக்கிறோம். நாடே போற்றி புகழும் கலைஞன் மணிரத்னம். அவருடன் பணியாற்றுவது பாக்கியம். இந்த படத்தில் நடித்த நடிகர்களை கவனித்ததே பெரிய அனுபவம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

image

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் கூறுகையில், “99-ல் இருந்து அவருடன் பணியாற்றுகிறேன். அது ஒரு முறையும் சுலபமானதாக இல்லை. இந்த முறையும் அப்படித்தான். ஆனால் பெரிய உழைப்பைத் கொடுத்து சிறப்பாக செய்திருக்கிறோம்” எனக் கூறினார்.

கலை இயக்குநர் தோட்டா தரணி பேசுகையில், ” ‘பாம்பே’ படத்திற்குப் பிறகு 28 வருடங்கள் கழித்து மணிரத்னம் படத்தில் பணியாற்றுகிறேன். அப்போதைக்கும், இப்போதைக்கும் எந்த வித்யாசமும் தெரியவில்லை. அதே மணிரத்னம் அதே ரசனை” எனத் தெரிவித்தார்.

நடன வடிவமைப்பாளர் பிருந்தா பேசுகையில், “மணிரத்னம் அவர்களுடன் 25 வருடமாக பணியாற்றுகிறேன். மிக மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆடை வடிவமைப்பாளர் ஏகா லகானி கூறுகையில், “ஒரு வரலாற்றுப் படம் என்பதால் இது கடினம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் மணி சாருடன் எந்தப் படம் என்றாலும் கடினம் தான். 10 வருடம் முன்பு ‘ராவணன்’ மூலம் என் பயணம் துவங்கியது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுப்பத்தது சவாலாக இருந்து” என குறிப்பிட்டார்.

“ரஹ்மானின் சவுண்ட் தனித்துவமானது. அவரின் அந்த குவாலிட்டியை மேட்ச் செய்ய ஆசை” எனப் பேசிய யுவன் சங்கர் ராஜா, தனக்குப் பிடித்த ரஹ்மானின் பாடல் என ‘தில்சேரே’ பாடலை பாடினார்.

சந்தோஷ் நாராயணன் பேசுகையில், “ரஹ்மான் எனக்கு பர்சனலான இன்ஸ்பிரேஷன். அவரின் பல பேச்சுகள் என்னை ஈர்த்துள்ளது. வாழ்க்கையில் அமைதியாக இருந்து சாதிப்பதை வாழ்ந்து காட்டியிருப்பவர்” என்று தெரிவித்தார்.

image

இசைமையப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “சின்ன வயதில் நாடகங்கள் பார்த்திருக்கிறேன். அதில் தோடி ராகத்தில் இசையமைப்பெல்லாம் செய்வார்கள். அந்த நினைவில் இருந்ததால் இந்தப் படத்தின் இசையமைக்கும் போது அது போன்ற இசையமைக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் மணி சார் அதை விரும்பவில்லை. பின்பு பழைய காலத்து இசைக்கருவிகள் என்ன என்பது பற்றி பாலிக்கு சென்று ஆய்வு செய்தோம். கோவில், கலாச்சார மையங்கள் எனப் பலவற்றிற்கு சென்றோம். 19-ம் நூற்றாண்டில் தமிழ் மற்றும் தென்னிந்திய கலாச்சாரம் இந்தப் படத்தின் இசையில் பிரதிபலிக்கும் படி உருவாக்கினோம். மிகவும் சுதந்திரம் எடுத்து செய்தோம். அந்த இசையை மணிரத்னத்துக்கு அனுப்பினோம். அவர் ஒரு மாதத்திற்குப் பிறகு அதில் என்ன எல்லாம் வேண்டும், என்ன வேண்டாம் என சொன்னார். அந்த அளவு தீவிரமாக யோசித்து ஒவ்வொன்றையும் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனை சொல்வேன். குறித்த நேரத்தில் பாடல்களை எழுதிக் கொடுத்தார். இந்த இடத்தில் இன்னருவரையும் நினைவு கூர வேண்டும். பாடகர் பம்பா பாக்யா. அவரது இழப்பு மிக வருத்தமானது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடிகையும், தயாரிப்பாளருமான ஐஸ்வர்ய லக்ஷ்மி பேசுகையில், “இந்தப் படத்தில் முதலில் எடுக்கப்பட்டது என்னுடைய காட்சிகள் தான். அதுமட்டுமல்ல என்னுடைய பிறந்தநாளன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாவது கூடுதல் மகிழ்ச்சி. 2019 டிசம்பரில் நான் அலைகடல் என்ற இப்படத்தின் பாடலில் நடித்தேன். பொதுவாக நான் அதிக மறதி கொண்ட நபர். ஆனால் இந்தப் படத்தின் ஒவ்வொரு நாளும் அப்படியே நினைவிருக்கிறது” எனக் கூறினார்.

நடிகை ஷோபிதா கூறுகையில், “இந்தப் படத்தை பற்றி பேச வேண்டும் என்றால், நிறுத்தாமல் பேசுவேன். அவ்வளவு இருக்கிறது. படத்தின் ஷூட் மிக சிறப்பான அனுபவம். மணிரத்னம் சாரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

image

இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “அதிரவைக்கும்படியான இசையை கொடுத்திருக்கிறார் ரஹ்மான். ‘பொன்னியின் செல்வன்’ யுனிவர்ஸூக்கே அழைத்து சென்றுவிட்டார். இப்போது பேன் இண்டியா என எல்லார் வாயிலும் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் முதல் பேன் இன்டியன் டைரக்டர் மணிரத்னம் தான். ‘ரோஜா’, ‘பாம்பே’ போன்ற படங்கள் மூலம் டைரக்ஷன், ஸ்டைல், கன்டென்ட் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். மணிரத்னம் படங்களில் ரஹ்மான் இசையால் ஒரு புரட்சியே செய்தார். இவர்கள் போட்ட பேன் இண்டியா பாதையில் நாங்கள் சௌகர்யமாக செல்கிறோம். முதல் பிரம்மாண்டமும் மணிசார் தான். ‘கீதாஞ்சலி’ படத்தின் ஓ ப்ரியா ப்ரியா, ‘தளபதி’ படத்தின் பாடல்கள் எல்லாம் மிக பிரம்மாண்டமாக இருக்கும். அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நானும் படத்திற்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் ‘இந்தியன் 2’ பற்றி அப்டேட் கேட்ட போது ‘இந்தியன் 2’ படத்தின் ஷெட்யூல் நேற்றுதான் முடிந்தது. அடுத்த ஷெட்யூல் இந்த மாதம் 3-வது வாரத்தில் கமல் சாருடன் துவங்குகிறோம் எனத் தெரிவித்தார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பேசுகையில் “இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மணிரத்னம் என்னுடைய குரு. எப்போதும் அவர் எனக்கு குருவாக இருப்பார். இந்த வாய்ப்புக்காக நன்றி. உங்களுடைய மாணவியை உங்கள் கனவுப் படத்தில் இணைத்துக் கொண்டீர்கள். ‘இருவர்’ படத்தில் ஆரம்பித்த நமது பயணம் இன்னும் தொடர்வதில் பெருமையாக உள்ளது. மறக்க முடியாத அனுபங்கள் பல கிடைத்தது. ‘பொன்னியின் செல்வனின்’ பாகமாக இருப்பது மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று. ரஜினிகாந்த் சார், கமல் சார் இருவருக்கும் நன்றி. ரசிகர்களின் அன்புக்கும் நன்றி” இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை த்ரிஷா பேசும்போது, ” இந்த அரங்கின் முதல் வரிசையைப் பார்த்தாலே என் கண்ணே பட்டுரும் போல் இருக்கிறது. அவ்வளவு நட்சத்திரங்கள் அமர்ந்திருக்கிறார்கள். என்ன சொன்னாலும் இந்தப் படத்தின் அனுபவத்தை பற்றி விவரிக்கவே இயலாது. ஜெயம் ரவி, விக்ரமுடன் இணைந்து ஜோடியாக நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வேற ஒரு உறவுமுறையில் கதாபாத்திரம் இருந்தது. அது கொஞ்சம் சிரிப்பாக தான் இருந்தது. ஆனால் படம் பார்க்கும் போது உங்களுக்கு அந்த எண்ணம் வராது. கதாபாத்திரங்களாக தான் பார்ப்பீர்கள்” என்று தெரிவித்தார்.

image

நடிகர் கார்த்தி பேசுகையில், “இது ஒரு வரலாற்று மேடை. ‘பொன்னியின் செல்வன்’ மூலம் இனி எங்கள் அடையாளம் மாறும். ‘பொன்னியின் செல்வன்’ ஒரு வரலாற்று புனைவு. நிஜ நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கிய கற்பனைக் கதை. அப்படி இந்தக் கதையை உருவாக்கிய கல்கிக்கு நன்றி. காதல், வீரம், பாசம் கலந்து எழுதியிருக்கிறார். இதைத் திரையில் கொண்டு வருவது கடினம். மின்சாரத்தை தொடுவது போல் ஆபத்தானது. ஆனால் சினிமாவின் மீது உள்ள காதலால் மணிரத்னம் எடுத்திருக்கிறார். 40 வருடமாக முயற்சிக்கிறார் மணி என கமல் சார் முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கமல் சார் நடிக்க விரும்பிய கதாபாத்திரம் வந்தியத்தேவன் என சொன்னார்கள். அவரால் நடிக்க முடியாமல் போனது. நல்ல வேளை அதனால் அந்த பாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த முறை துவங்கிய போதும் கொரோனா என்ற ஆபத்து வந்தது, படப்பிடிப்பு தடைபட்டது. ஆனால் மணி சார் நம்பிக்கையை விடவில்லை. இந்தப் படத்தை எடுத்து முடித்ததே தனியாக ஒரு பெரிய சாதனை. படத்தில் எல்லா கதாபாத்திரங்களையும் சந்திக்கும் கதாபாத்திரம் என்னுடையது. அந்த பாத்திரம் எப்படி பேசும் என்ன செய்யும் என்பதை மணிரத்னம் சொல்லிக் கொடுத்தார். மேலும் இப்படிப்பட்ட நடிகர் பட்டாளத்துடன் இருப்பதே பெரிய மகிழ்ச்சி. விக்ரம் சாரை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து அவர் நடிப்பதைப் பார்ப்பது பேரனுபவம். ரவி என் நண்பன், அவனுடன் பணியாற்றியது, த்ரிஷாவுடன் நடித்தது, ஐஸ்வர்யா ராய் மேடம் படத்தின் வசனங்களை பப்ளிக் எக்சாம் செல்லும் மாணவி போல படித்ததை நான் பார்த்தது என முழுக்க சந்தோஷம் நிறைந்த அனுபவங்கள். உலகின் சிறந்த வரலாற்றுப் புனைவாக ‘வார் அண்ட் பீஸ்’ நாவலை சொல்வார்கள். ‘பொன்னியின் செல்வன்’ வந்த பின் இந்த ‘வார் அண்ட் லவ்’ ஐ மக்கள் ரசிப்பார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

image

ஜெயம் ரவி பேசுகையில், “ஐஸ்வர்யா ராய் தமிழில் பேசியதைப் பார்த்து மயக்கத்தில் இருக்கிறேன். என்ன பேசுவது என தெரியவில்லை. இந்தப் படத்தில் எனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என பலரும் கேட்டார்கள், எனக்கு பதில் இல்லை. நானும் யோசித்துப் பார்த்தேன். அம்மா- அப்பா செய்த புண்ணியமா, இல்லை ரஜினி சார் சொல்வது போல் கிடைக்கிறது கிடைக்காம இருக்காது என்ற தியரியா என்று. ஆனால் இத்தனை வருடமாக நான் ஒழுங்காக எனது வேலையை செய்து கொண்டிருப்பதே ஒரு தகுதி என நான் நம்புகிறேன். அருண்மொழி வர்மன் என்றால் யார், அவன் என்ன செய்தான், எப்படி இருப்பான் என மணி சார் ஒவ்வொன்றாக சொல்லித் தந்தார். படத்தின் ஷூட் துவங்குவதற்கு ஆறு மாதம் முன்னால் இருந்தே அருண்மொழி வர்மனாகவே வாழ ஆரம்பித்தேன். அந்த அளவு தாக்கத்தை உண்டாக்கிய படம் இது” என்று தெரிவித்தார்.

விக்ரம் பேசுகையில், “எங்களை ஆசிர்வதிக்க வந்த ரஜினி சார், கமல் சாருக்கு நன்றி. தமிழன் என்கிற மனநிலையைக் கொண்டாட பல காரணம் உண்டு. அதில் ஒன்று இதே மண்ணில் வாழ்ந்த முன்னோர்கள். மக்கள் மன்னனைக் தேர்வு செய்வது, இலவச மருத்துவம், நீர் மேலாண்மை எனப் பலவும் ஆயிரம் வருடம் முன்பே இருந்தது. உலகின் பெரிய கப்பல் படை சோழர்களிடம் இருந்தது. இப்படியான பல பெருமைகளைப் பேசப் போகும் காவியம் தான் பொன்னியின் செல்வன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.