சென்னை: பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய ஹைலைட் ஆக அமைந்தது. முழு அரங்கத்தையும் அவரே ஆக்கிரமித்துக்கொண்டார்.
தளபதி படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் மணிரத்தினத்தின் அங்கீகாரத்தை பெற தான் போராடியதை நகைச்சுவையாக பல இடங்களில் அவர் குறிப்பிட்டார்.
மணிரத்தினத்தை சமாளிக்க கமல்ஹாசனிடம் தான் எவ்வாறு ஆலோசனை கேட்டேன் என்பதை பற்றி அவர் சுவாரஸ்யமாக பேசினார்.
சுவாரஸ்ய பேச்சால் அரங்கை தன் வசப்படுத்திய ரஜினி
எம்ஜிஆர், கமல் முதல் பலரது ஆசையாக, பேராசையாக இருந்தது பொன்னியின் செல்வன் படம். இப்படத்தை தயாரிக்க அதில் நடிக்க எம்ஜிஆர் அதன் பின்னர் கமல் உள்ளிட்ட பலர் முயற்சி செய்தாலும் காலம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இறுதியாக மணிரத்தினம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் படம் ஒருவழியாக வெளியாக உள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக வருகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டு பேசினாலும் நடிகர் ரஜினிகாந்த் வழக்கம்போல் தன் பேச்சால் அரங்கத்தை தன் வசப்படுத்திக்கொண்டார்.
மணிரத்னத்துடன் தளபதி படத்தில் ஏற்பட்ட அனுபவம்- சுவாரஸ்யமாக சொன்ன ரஜினி
ஸ்டைலில் மட்டுமல்ல பேச்சிலும் தான் வல்லவர் என்பதை நேற்று ரஜினிகாந்த் நிரூபித்தார். அரங்கம் முழுவதையும் ரஜினிகாந்தின் பேச்சு ஆக்கிரமித்து இருந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் தங்களுடைய அனுபவங்கள் பற்றி நடித்த நடிகர் நடிகைகள் பேசினர். அதே நேரம் 50 ஆண்டுகால சினிமா வரலாற்றில் பொன்னியின் செல்வனை எடுக்க தாம் எடுத்த முயற்சிகள் குறித்து கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் குறித்து ரஜினிகாந்த் ஆகியோர் பேசினர். அப்பொழுது ரஜினிகாந்த் இயக்குனர் மணிரத்னத்தை பற்றி பேசும்பொழுது மிகப்பெரிய நடிகர் என்கிற நிலையில் இருந்து இறங்கி வந்து தான் மணிரத்தினத்திடம் பட்ட அவஸ்தைகளை நகைச்சுவையாக பல இடங்களில் குறிப்பிட்டார்.
மம்முட்டி அருகில் நான் நல்லா இருக்கணும் கொஞ்சம் பவுண்டேஷன் கிரிமாவது கொடு-ரஜினி
அதில் அவரும் மணிரத்தினமும் தளபதி படத்தில் இணைந்த சுவாரசிய கதை பற்றி சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. ரஜினி தனக்கே உரிய ஸ்டைலில் பல இடங்களில் நகைச்சுவையாக பேசி அரங்கை அதிர வைத்தார். மேடையில் உள்ளவர்களும் அதை வெகுவாக ரசித்தனர். தளபதி படத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருந்து மைசூருக்கு ஷூட்டிங் இருக்குன்னு சொன்னாங்க நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தேன். நேராக மேக்கப் ரூமுக்கு செல்ல முயன்ற போது உதவி இயக்குநர் வந்து மேக்கப் எல்லாம் இல்லை சார் என்றார். சார் இப்படியே வர சொன்னாரு என்று சொல்ல என்னப்பா சொல்ற நான் யாரு தளபதிப்பா, அதுவும் கூட நடிக்கிறது யாரு மம்முட்டி, சும்மா ஆப்பிள் மாதிரி கலரா இருப்பாரு அவர் கூட நான் மேக்கப் போடாமல் நின்னா என்ன ஆகுறது? பௌர்ணமி பக்கத்தில் அமாவாசை இருக்கிற மாதிரி இருக்காது? கொஞ்சம் பவுண்டேஷன் கிரிமாவது கொடுங்கப்பா என்று வாங்கி பூசிக்கொண்டு சென்றேன்.
நான் தளபதிப்பா..எனக்கு ரப்பர் செருப்பா? உதவி இயக்குநரிடம் கேட்ட ரஜினி
அப்போ இன்னொரு உதவி இயக்குனர் சார் காஸ்ட்யூம் என்று தொளதொளன்னு இருக்கிற டிரஸ்ச கொண்டு வந்து கொடுத்து போட்டுக்க சொன்னார். அதைப்பார்த்து நான் என்னப்பா இது இவ்வளவு லூசா தொள தொளன்னு இருக்கே நான் யாரு தளபதிப்பான்னு மீண்டும் சொன்னேன். இல்ல சார் டைரக்டர் சார் தான் இதை போடச்சொன்னார்னு சொல்ல அந்த டிரஸ்ச போட்டுகிட்டு சரி ஷூ எங்கேன்னு கேட்க ஷூ இல்ல சார்னு ஒரு ஹவாய் சப்பல் கொடுத்து இதத்தான் போட்டுகிட்டு வரச்சொன்னார்னு சொன்னார். அடப்போப்பான்னு என்னிடம் இருந்த வாக்கிங் ஷூவை போட்டுகிட்டு செட்டுக்கு போனேன். என்னைப்பார்த்த மணிரத்னம் சார், ரஜினி சார் சின்ன கரெக்ஷன் என சொல்லி விட்டு aவரும் உதவி இயக்குநர்களும் தனியா போய் பேசிகிட்டிருந்தாங்க.
தளபதி படத்தில் உங்கள தூக்கிட்டு கமலை போட போகிறார்கள்
கேமராமேன் அவருடௌய டீமோடு தனியா பேசிகிட்டு இருந்தார். ஒரு ஓரமா சுஹாசினி மேடம் நிக்கிறாங்க, நான் என்னடா நடிக்க வந்து நின்றுவிட்டோம் இவர்கள் தனியா போயி ஏதோ பேசிட்டு இருக்காங்க அப்படின்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன். அப்ப பக்கத்துல ஷோபனா இருந்தாங்க, சோபனா எப்பவுமே கேலி கிண்டலோடு பேசக்கூடியவங்க. என்ன சார் தனியா போய் பேசிட்டு இருக்காங்கன்னு யோசிக்கிறீர்களா? நீங்க இந்த படத்துக்கு செட் ஆக மாட்டீங்க உங்கள தூக்கிட்டு கமல்ஹாசனை போடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க. எனக்கு குழப்பமாயிடுச்சு, கமலுக்கு போன் போட்டேன் என்னப்பா இது இவர்கூட படம் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கேன்னு சொன்னேன். ஒன்னுமே புரியல அப்படின்னு கேட்டேன்.
கமல் கொடுத்த டிப்ஸ் மணிரத்னத்தை சமாளித்த ரஜினி
கமல் சொன்னார், மணி சார் படம் எப்படி எடுப்பார்னு எனக்கு தெரியும், அவரு சீன் பற்றி போது அதை ரொம்ப சீரியஸா உள்வாங்குற மாதிரி இருங்க, அந்த காட்சியிலேயே அப்படியே ஊறிப்போன மாதிரி இருங்க அதுக்கு பிறகு நீங்க நடிங்க அவர் ஓகே சொல்லுவார் என்றார். அதற்கு பிறகு அதே மாதிரி அவர் காட்சி சொல்லும் போது சீரியசாக சிகரெட் பிடிச்சுகிட்டு ரொம்ப சீரியஸா உள்வாங்குற மாதிரி உள் வாங்கிட்டு வந்து நடிப்பேன் அதுக்கு பிறகு அவர் ஓகே சொல்லுவாரு இது கமல் கொடுத்த டிப்ஸ்” அப்படின்னு சொல்லும்போது அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. “நான் என்கிட்ட இருக்கிற வித்தைகளை எல்லாம் அதாவது இருக்குற ஸ்டாக் கோபம், அழுகை, வீரம் எல்லாத்தையும் நடிச்சு காமிச்சாலும் என்னதான் நல்லா பண்ணாலும் ரொம்ப சாதாரணமா இது வேணாம் சார் வேற மாதிரி பண்ணுவோம் அப்படின்னு போயிடுவாரு” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட மேடையில் இருந்த நடிகர்களும் ஆமோதித்து தலையாட்டினர்.
சக போட்டியாளர் கமலிடம் ஆலோசனை கேட்டதை பெருந்தன்மையுடன் சொன்ன ரஜினி
ரஜினிகாந்த் புகழின் உச்சத்தில் இருப்பவர், என்றைக்கும் நம்பர் ஒன் அவர்தான், அவர் தன் உயரத்தை மறந்து ரொம்ப இயல்பா தன்னுடைய அனுபவத்தையும், தன்னுடைய சக போட்டியாளர் கமல்ஹாசனிடம் ஆலோசனை கேட்டதையும் சாதாரணமா மேடைல சொன்னது சிறப்பான ஒரு விஷயம் என்று சொல்லலாம். அது ரஜினியின் பெருந்தன்மை. அதேபோல் பேச ஆரம்பிக்கும்போது கமல் பக்கத்தில் நிற்க “கமல் நீங்க உக்காருங்க நான் கொஞ்சம் அதிகமா பேச போறேன்” என்று கேட்க கமல் நீங்க பேசுங்க நான் நிற்கிறேன் என்று சொன்னது அரங்கில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்திலும் தனக்கு ஒரு சின்ன வேஷமாவது வேண்டும் எனக்கேட்டும் மணிரத்னம் மறுத்ததையும் ஜாலையாக குறிப்பிட்டார் ரஜினி.