சமூக நல வாரிய செயல்பாடுகளை இணைத்து கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்: தலைவர், உறுப்பினர்-செயலர், உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில சமூக நல வாரிய செயல்பாடுகளை இணைத்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக சமூக நலத் துறைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

சமூக நலத் துறை அமைச்சர் கடந்த ஆண்டு சட்டப் பேரவையில், “தமிழகத்தில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைந்து, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி வழங்கவும், சமூகத்தில் பாதுகாப்புடன் வாழவும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்’ அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இது தொடர்பாக சமூக நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், நல வாரியத்தை அமைக்கவும், வாரிய அலுவலகம் உள்ளிட்டவற்றுக்காக ரூ.10.59 கோடி நிதி வழங்குமாறும் அரசைக் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எழுதிய கடிதத்தில், மைய சமூக நல வாரியத்தை மூட மத்திய நிதித் துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இனி தமிழ்நாடு சமூக நல வாரியத்துக்கு நிதி, நிர்வாகம், சேவை வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், மாநில சமூக நல வாரியத்தில் பணியாற்றுவோரை மத்திய அரசின் திட்டங்கள் அல்லது மாநில அரசின் திட்டங்களின் கீழ் மாற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், புதிதாக உருவாக்கப்படும் கைம்பெண்கள் நல வாரியத்துடன், மாநில சமூக நல வாரிய செயல்பாடுகள், பணிகளை இணைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, தமிழக அரசு உத்தரவின்பேரில், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டோர், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் பாதுகாப்புடன் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கப்படுகிறது.

சமூக நலத் துறை அமைச்சர் தலைமையிலான இந்த வாரியத்தில், சமூக நலத் துறைச் செயலர், எம்.பி. கனிமொழி சோமு, எம்எல்ஏ வரலட்சுமி, நிதித் துறைச் செயலர் அல்லது அவரது பிரதிநிதி, பெண்கள், குழந்தைகளுக்கான குற்றத் தடுப்பு கூடுதல் டிஜிபி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர், மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், சமூக நலத் துறை இயக்குநர் உறுப்பினர்-செயலராகவும் செயல்படுவர்.

ஆதரவற்ற பெண்கள், ஏழை கைம்பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோரை இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக்கவும், பயனாளிகளை இளம், நடுத்தரம், முதிர் வயது என வகைப்படுத்தி முன்னுரிமை அளிக்கவும் சமூக நல இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாரியத்துக்கு செலவினமாக ஆண்டுக்கு ரூ.56.61 லட்சம் அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.