நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் என்ற பெருமைக்குரியவர் சாவித்திரிபாய் பூலே. 1981-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மும்பை பிரசிடென்சியில் பிறந்தார்.
அவரது 9 வயதில் ஜோதிராவ் பூலேவுக்கு அவரை திருமணம் செய்து வைத்தனர். சமூக சீர்திருத்தவாதியான தன் கணவரிடம் ஆரம்பக்கல்வியைப் பெற்று, பின் அகமத்நகரில் உள்ள அமெரிக்க மிஷனரி நிறுவனத்தில் தனது ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார்.
பயிற்சிக்குப் பின், தன் கணவர் தொடங்கிய பெண்கள் பள்ளியில் ஆசிரியராகத் தனது பணியை தொடங்கினார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.
புனேவில் பெண்களுக்கான பள்ளிகளைத் தொடங்கி, பெண் கல்வியை ஊக்குவித்தனர் சாவித்திரிபாய் – ஜோதிராவ் தம்பதி.
சாதிய அடக்குமுறைக்கு எதிராக செயல்படத் தொடங்கிய சாவித்திரிபாய், அதற்கான நல்வழியாய் கல்வியைக் கருதினார்.
பெண் கல்விக்கு எதிரான பழமைவாதிகள் சாவித்திரிபாய் மீது கற்கள், சாணம் கொண்டு தாக்கினர், தகாத வர்த்தைகளை வீசினர். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தனது கல்விப் பணியைத் தொடர்ந்தார்.
கல்வி வாய்ப்புக் கிடைக்காத பல்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி வழங்கவும், பெண்கல்வியை ஊக்குவிக்கவும் தன் கணவருடன் சேர்ந்து மேலும் 15 பள்ளிகளைத் தொடங்கினார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கருவுற்ற பெண்கள் மற்றும் சிசுவின் நலனுக்காக ‘பால்ஹத்யா பிரதியந்தக் க்ரிஹா’ என்ற மையத்தை தொடங்கினார்.
கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலைக்காகப் போராடினார். குழந்தை இல்லாத பூலே தம்பதி, கணவரை இழந்த ஒரு பெண்ணின் `யஷ்வந்த் ராவ்’ என்ற பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்தனர்,
பிளேக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிகிச்சை மையம் தொடங்கி அவர்களுக்காகவும் சேவையில் ஈடுபட்டார். அதே நோயால் பாதிக்கப்பட்டு மக்கள் நல சேவையிலே 1897-ல் இயற்கை எய்தினார்.
இவரின் சேவையை நினைவுகூரும் வகையில், 1996-ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 2015-ம் ஆண்டு புனே பல்கலைக்கழகத்துக்கு சாவித்திரிபாய் பூலே பெயரிடப்பட்டது.
இவரது பிறந்தநாளை மகாராஷ்டிர அரசு பெண் குழந்தை தினமாகக் கொண்டாடுகிறது.