புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் இரு நாடுகளுக்கிடையே நேற்று 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இரு நாடுகள் இடையேயான வர்த்தக உறவு கடந்த 2021-ல் 50 ஆண்டுகளை எட்டியது. அதன்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரமதர் நரநே்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் ஷேக் ஹசீனாவும் சந்தித்துப் பேசினர். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வங்கதேச வெள்ள நிலவரம், தீவிரவாத பிரச்சினை, இருதரப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, நீர்வளம், வர்த்தகம், முதலீடு, எல்லை மேலாண்மை மற்றும் பாதுகாப்பு, வளர்ச்சியில் கூட்டுறவு, பிராந்திய மற்றும் பல்நோக்கு விஷயங்கள் தொடர்பாக இருதரப்பு குழுவினரும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இரு தலைவர்கள் முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்நிகழ்ச்சிக்குப்பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
ஆசியாவிலேயே இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வளர்ச்சியை மேலும் அதிகரிக்க, விரிவான இருதரப்பு பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் குறித்து விரைவில் ஆலோசிக்க உள்ளோம். வரும் காலங்களில், இருதரப்பு உறவு புதிய உச்சத்தை எட்டும். வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப் பெரிய நட்பு நாடாக தற்போது வங்கதேசம் உள்ளது. இரு நாட்டு மக்கள் இடையேயான கூட்டுறவிலும் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது.
குஷியாரா நதி நீர் ஒப்பந்தம்
இந்தியா-வங்கதேசம் இடையேயான வர்த்தகம் வேகமாக அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் பகிர்வு வழித்தடங்களை அமைப்பது தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்தியா – வங்கதேச எல்லைவழியாக 54 நதிகள் ஓடுகின்றன. இவை இருநாட்டு மக்களுக்கும் வாழ்வாதாரமாக உள்ளன. குஷியாரா நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முக்கிய ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம்.
வெள்ள பாதிப்பை குறைப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. வெள்ளம் தொடர்பான நிகழ்நேர தரவுகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்கின்றன.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்தியாவுக்கு வருவது மகிழ்ச்சி
ஷேக் ஹசீனா கூறும்போது, “இந்தியா எங்கள் நட்பு நாடு. இந்தியாவுக்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியானது. எங்கள் விடுதலைப் போரில், இந்தியா அளித்த பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவு கூர்கிறோம். இரு நாடுகளும் நட்புடனும், ஒத்துழைப்புடனும் செயல்படுகிறோம்” என்றார்.