பென்னிகுவிக் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் தேனி எம்எல்ஏக்கள்

பென்னிகுவிக் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் இ.பெரியசாமி இங்கிலாந்து கிளம்பிச் சென்றார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்க கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், சரவணக்குமார் மற்றும் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனும் நேற்று கிளம்பிச் சென்றனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஆங்கிலேயப் பொறியாளர் ஜான் பென்னிகுவிக் 1895-ல் கட்டினார். இதன் மூலம் இம்மாவட்டங்களின் வறட்சி நிலை நீங்கியது.

இதற்கு நன்றிக்கடனாக தேனி மாவட்ட மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு இவரது பெயரை சூட்டுவதுடன் அவரது பிறந்தநாளான ஜன.15-ம் தேதியில் பொங்கல் வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் இவருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரது நினைவைப் போற்றும் வகையில் பென்னிகுவிக் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி எடுக்கப்பட்டு, சிலையை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

வரும் 10-ம் தேதி சிலை திறக்கப்பட உள்ளது. இதற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அரசு முறைப் பயணமாக லண்டன் கிளம்பிச் சென்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், சரவணக்குமார், தேனி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று சென்னை சென்றனர்.

இன்று காலையில் இவர்கள் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த பென்னிகுவிக்குக்கு, அவரது சொந்த ஊரில் சிலை அமைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இருப்பினும், குறிப் பிட்ட அளவு விவசாயிகளையும் அரசு சார்பில் இந்நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருக்கலாம் என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.