சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம்போல, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கடந்த 1962-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் ‘காசித்திட்டு’ என்ற கிராமமே இன்று இல்லாமல், ஆற்றுக்குள் புதைந்துவிட்டது. அப்போது அங்கிருந்து தப்பித்து வெளியேறியவர்கள் கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு போன்ற கிராமங்களில் இன்றும் வசித்து வருகின்றனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தால் காசித்திட்டு கிராமம்போல் நாதல்படுகை, முதலைமேடுதிட்டு ஆகிய இரண்டு கிராமங்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுமோ என்ற அச்சத்தில் அங்கு வசிக்கும் மக்கள் கவலையில் இருக்கின்றனர்.
நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கொள்ளிடம் ஆற்றின் கரையோரமிருக்கும் திட்டு கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த ஐந்து நாள்களாக தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்தக் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம், அனுமந்தபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாதல்படுகை கிராமத்திலிருக்கும் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துவிட்டன.
இந்தக் கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி, பருத்தி, வெண்டை, கத்திரி, தக்காளி உள்ளிட்ட தோட்ட பயிர்களும், சாமந்தி, மல்லி, முல்லை உள்ளிட்ட மலர் செடிகளும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாதல்படுகை கிராமத்தைத் தண்ணீர் சூழ்ந்து விடுவதால், இந்தக் கிராமம் படிப்படியாக கொள்ளிடம் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்தக் கிராமங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் தேவைக்கு பொக்லைன் எந்திரம் கொண்டு சுமார் 10 அடி ஆழத்துக்கு மண் எடுத்து வருவதால், வருங்காலத்தில் ஆற்று நீரில் இந்தக் கிராமம் எளிதில் அடித்துச் செல்லப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய கிராமமக்கள், “கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களும், 25-க்கும் மேற்பட்ட வீட்டுக் குடியிருப்பு மனைகளும் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எங்கள் கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களுக்கு உடனடியாக கொள்ளிடம் ஆற்றின் கரைப்பகுதியின் வெளியில் மாற்று இடம் வழங்கி, அரசு வீடு கட்டித்தர முன்வரவேண்டும்” என்றனர்.