பொன்னியின் செல்வன் சக்சஸ்: ப்ரோமோஷனுக்கு களமிறங்கிய பாஜக!

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டீசரும், பொன்னி நதி பாக்கணுமே பாடலும், சோழா சோழா பாடலும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசான் இணைந்து படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். நடிகர் கமல்ஹாசனின் குரலில் படத்தின் முன்னோட்டம் தொடங்குகிறது. ட்ரெய்லரில் படத்தில் சில காட்சி துணுக்குகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் ஏற்று நடித்த ஜெயராம் பேசும் வசனத்தை பாஜக ஆதரவாளர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அதாவது, தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியானது. அந்த காட்சி துணுக்குகளில் அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் நம்பி ஆகியோர் குதிரை வண்டியில் பயணம் செய்யும் போது தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அப்போது, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வசனம் பேசும் ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரம் ‘நாராயணா’ என்று அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஆனால், தமிழ் மொழியில் மட்டும் ‘அய்யயோ’ என்று அலறுகிறது. இதைத்தான் பாஜக ஆதரவாளர்கள் கையில் எடுத்துக் கொண்டு, தமிழ் மன்னர்கள் தமிழ் மண்ணில் எந்தளவு சனாதான தர்மத்தை கடைபிடித்தார்கள் என்பதை காட்டாமல் மணிரத்னம் மறைத்து விட்டதாக விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

பொதுவாக, பாஜக ஆதரவாளர்கள் ஒரு படத்தை விமர்சித்தால் அது கண்டிப்பாக வெற்றியடைந்து விடும் என்பதைத்தான் கடந்த சில நிகழ்வுகள் உணர்த்தியிருக்கிறது. உதாரணமாக, மெர்சல், விக்ரம் போன்ற படங்களை சொல்லலாம். அந்த வகையில், பாஜக ஆதரவாளர்கள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள பொன்னியின் செல்வன் படமும் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் கதைக்களத்தின் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் கடுமையான மோதிக் கொண்டிருந்தன. திருமலை எனும் இயற்பெயர் கொண்டவர் என்றாலும் வைணவ சமயத்தினை பாடல்களால் வளர்த்த ஆழ்வார்களின் மேல் பற்று கொண்டு தன் பெயரை ஆழ்வார்க்கடியான் நம்பி என்று மாற்றிக் கொண்டார். உடல் முழுவதும் திருநாமம் இட்டுக் கொண்டும், கையில் எப்போதும் தடியுடன் இருப்பவராக அவரை கல்கி காட்சிப்படுத்தியிருப்பார். வைணவத்தின் மீதான பற்றினால் சைவர்களை காணும் பொழுதெல்லாம் சண்டையிடுகின்றவர் ஆழ்வார்க்கடியான் நம்பி. பொன்னியின் செல்வன் கதைமுழுவதும் சைவர்கள் நிரம்பியிருக்கும் போதும், வைணவத்தின் சார்பாக வந்து சமன்செய்கிறவர் இவர்.

நகைச்சுவை ததும்ப பேசுவதும், அறிவுப்பூர்வான ஆலோசனைகள் சொல்வதில் வல்லவராகவும், சிறந்த ஒற்றனாகவும், நம்பிக்கைக்குரியவராகவும், சோழ பேரரசின் மீது பற்றுக் கொண்டவராகவும், பழுவூர் இளையராணி நந்தினி தேவியை வளர்த்த சகோதரராகவும் ஆழ்வார்க்கடியான் நம்பி சித்தரிக்கப்படுகிறார். வந்தியத்தேவனை பல சமயங்களில் சிக்கலில் இருந்து காப்பாற்றி அவனுடனேயே பயணிக்கும் வேதாளமான ஆழ்வார்க்கடியான் நம்பி, கல்கியின் கதையைப் பொறுத்தவரை சோழ பேரரசின் முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றன் ஆவார். ஆனால், இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி கல்கியின் கற்பனை கதாப்பாத்திரம்தான் என்கிறார்கள். உண்மையில் இந்த நபர் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் தற்போது வரை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.