கவுகாத்தி: அசாம் மாநில அதிகாரிகள் நேற்று கூறியதாவது.
கோல்பரா மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மதரஸா பள்ளியை அப்பகுதியிலுள்ள உள்ளூர் மக்கள் இடித்து தரைமட்டமாக்கினர். வங்கதேசத்தைச் சேர்ந்த அமினுல் இஸ்லாம் மற்றும் ஜஹாங்கீர் ஆலம் ஆகிய இருவரும் 2020 முதல் இந்த பள்ளியை நடத்தி வந்துள்ளனர். அவர்கள் இருவரும் அல் கய்தா அமைப்பின் உறுப்பினர்கள். அவர்களுடைய வீட்டையும் பொதுமக்கள் சூறையாடினர். தப்பியோடிய இருவரையும் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலத்தில் அசாமில் இடிக்கப்படும் 4-வது மதரஸா பள்ளி இதுவாகும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா கடந்த மாதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, வேறு மாநிலத்தில் இருந்து அசாம் வந்து மதரஸா மற்றும் பள்ளி வாசல்களில் பணியாற்றும் மத ஆசிரியர்கள் அரசின் இணையதளத்தில் அவர்களின் விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசு அறிவித்தது. மேலும், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த மார்ச்சிலிருந்து இதுவரை தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.