போபால்: மத்திய பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்ற புலியிடம் தீரமாக சண்டையிட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
“தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்தில் இல்லை” என கேஜிஎப் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக பல சம்பவங்கள் இந்த உலகில் நடந்திருக்கின்றன.
தனது குஞ்சுகளை காப்பாற்ற பாம்பை கொன்ற எலி, கழுகை ஓட ஓட விரட்டிய குருவிகள் என எத்தனையோ வீடியோக்கள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
இயற்கை உபாதை கழிப்பதற்காக..
தனது குழந்தைக்கு ஆபத்து என்றால் எந்த எல்லைக்கும் சென்று காப்பாற்ற தாய் தயங்க மாட்டாள் என்பதற்கு சான்றாக மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் உள்ளது பந்தவர்க் புலிகள் காப்பகம். இந்தப் பகுதிக்கு அருகே உள்ள ஹொஹானியா கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா (32) என்ற பெண் தனது 15 மாத ஆண் குழந்தையை இயற்கை உபாதை கழிப்பதற்காக குடிசையை விட்டு வெளியே வந்திருக்கிறார்.
குழந்தையை இழுத்துச் சென்ற புலி
அப்போது அங்குள்ள புதரில் மறைந்திருந்த ஒரு பெரிய புலி, கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து குழந்தையை கடித்து இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சனா, உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்தப் புலியை விடாமல் துரத்திச் சென்றார். ஒருகட்டத்தில் குழந்தையை கீழே போட்ட புலி, அர்ச்சனா மீது பாய்ந்தது.
வெறும் கையில் சண்டை
அர்ச்சனாவும் புலியுடன் கடுமையாக சண்டையிட்டார். கீழே இருந்த பெரிய கல்லை எடுத்து புலியின் முகத்தில் தாக்கினார். இதனால் புலி மேலும் மூர்க்கமாகி, அர்ச்சனாவை பல இடங்களில் கடித்து குதறியது. பின்னர், குழந்தையை திரும்பவும் கவ்வி செல்ல முயற்சித்தது.
ஆனால், உடல் முழுவதும் ரத்தம் வழிய வழிய புலியுடன் மீண்டும் கட்டிப்புரண்டு சண்டை போட்டார் வீரப்பெண் அர்ச்சனா.
ஓடி வந்த கிராம மக்கள்
இதனிடையே, புலியின் சத்தமும், அர்ச்சனாவில் அலறல் சத்ததையும் கேட்ட கிராம மக்கள் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்த புலி அங்கிருந்து காட்டுக்குள் ஓடியது.
அதன் பின்னர், புலியுடன் சண்டையிட்டு குத்துயிரும் கொலை உயிருமாக இருந்த அர்ச்சனாவையும், குழந்தையையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைக்கு பின் தாய் – சேய் நலம்
புலியுடன் மல்லுக்கட்டியதில் அர்ச்சனாவுக்கு இடுப்பு, கை, கால், முதுகு ஆகிய பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும், அவரது நுரையீரலையும் புலி தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது. குழந்தைக்கு தலைப் பகுதியில் புலியின் பற்கள் ஆழமாக பதிந்திருந்தன.
இதையடுத்து தாயும், குழந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், ஒரு வாரமாவது அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தனது குழந்தையை காப்பாற்ற குரூரமான புலியிடமே போராடி வெற்றி பெற்ற அர்ச்சனாவுக்கு மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.