திருவனந்தபுரம்: பண்டைய காலத்தில் கேரளாவை மாவேலி மன்னன் ஆண்டதாகவும், மக்கள் அனைவரும் செல்வச் செழிப்புடனும், வாழ்ந்ததாகவும் ஐதீகம். இதனால் மாவேலி மன்னனின் புகழ் வானுலகம் வரை சென்றது. மண்ணுலகில் ஒரு மன்னனின் பெயரும், புகழும் வானுலகம் வரை சென்றதை தேவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் மாவேலி மன்னனை வதம் செய்வதற்காக வாமனன் அவதாரம் எடுத்து திருமால் பூவுலகம் வந்தார். மாவேலி மன்னனை சந்தித்த வாமனன், தனக்கு 3 அடி மண் வேண்டும் என்று கேட்டார். மாவேலி மன்னனும் சம்மதித்தார்.
அடுத்த நொடியிலேயே விஸ்வரூபம் பூண்ட வாமனன், ஒரு அடியில் வானத்தையும், அடுத்த அடியில் பூமியையும் அளந்தார். 3வது அடியை எங்கே வைப்பது என்று வாமனன் கேட்டபோது தனது தலையில் வைக்குமாறு மாவேலி மன்னன் கூறினார். அதற்கு முன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று மாவேலியிடம் வாமனன் கேட்டார். வருடத்திற்கு ஒரு நாள் நான் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், அப்போது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக என்னை வரவேற்க வேண்டும் என்றும் வரம் கேட்டார். அதற்கு வாமனனும் சம்மதித்தார். அதன்படி மாவேலி மன்னன் மலையாளிகளை சந்திக்க வரும் நாள் தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று புராணக்கதை சொல்கிறது.
திருவோண நாளில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளின் முன்பு அத்தப் பூக்கோலமிட்டு மாவேலி மன்னனை வரவேற்பார்கள். கேரள மாதமான சிம்மம் மாதத்தில் அத்தம் நாளில் இருந்து திருவோணம் வரை 10 நாள் மலையாளிகள் தங்களது வீடுகளின் முன் பூக்கோலம் இடுவார்கள். இதற்கு அடுத்தபடியாக ஓணம் பண்டிகையில் மிக முக்கிய பங்கு வகிப்பது ‘ஓண சத்யா’ என்று அழைக்கப்படும் ஓண விருந்தாகும். தலைவாழை இலையில் பல தர பாயசம், கூட்டு கறிகளுடன் இந்த விருந்து பரிமாறப்படுகிறது. ஓணம் பண்டிகை நெருங்கி விட்டால் வீடுகள் மட்டுமல்லாமல் கோயில்கள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் இந்த ஓண விருந்து வழங்கப்படும்.
இந்த வருட ஓணம் பண்டிகை நாளை (8ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கேரளாவே விழாக்கோலம் பூண்டு உள்ளது. திருவனந்தபுரம் முதல் வட எல்லையான காசர்கோடு வரை அனைத்து பகுதிகளுமே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புத்தாடைகள் உள்பட தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஓணம் பண்டிகை களையிழந்தது. 2020ல் கொரோனா நிலைகுலைய வைத்தது.
அந்த ஆண்டும் மலையாளிகளால் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. 2021லும் கொரோனாவின் தாக்கம் நீடித்ததால் கடந்த ஆண்டும் ஓணம் பண்டிகை கனவாகி போனது. இப்படி வரிசையாக 4 ஆண்டுகள் ஏமாற்றத்தை தந்த நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நீண்ட நாள் குறையை போக்குவதற்காக துபாய், குவைத், அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் ஓணத்தை கொண்டாடுவதற்காக கேரளாவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு உள்பட பல்வேறு நகரங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 4வருடங்களுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் கலைஞர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மொத்தத்தில் கொரோனாவால் கடந்த 2 வருடங்களாக வீடுகளிலேயே அடைபட்டுக் கிடந்தவர்களுக்கு இந்த வருட ஓணம் பண்டிகை பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்றால் அது மிகையல்ல.
தோவாளை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.5 ஆயிரம்
கேரளாவில் இந்தாண்டு ஓண பண்டிகை கடந்த 30ம் தேதி தொடங்கியது. அன்று முதல் குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்தது. நாளை (8ம்தேதி) ஓணம் பண்டிகை என்பதால் நேற்று இரவு முதலே பூக்கள் விற்பனை, தோவாளை பூ மார்க்கெட்டில் களை கட்டியது. விடிய, விடிய வியாபாரிகள் குவிந்தனர். கார்கள், டெம்போக்களில் வந்து பூக்களை வாங்கி சென்றனர். அதிகளவில் வியாபாரிகள் குவிந்ததால், பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்தது. நேற்று நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை மல்லிகை கிலோ ரூ.5 ஆயிரம் வரை எட்டியது.
இதே போல் ரூ.1500ல் இருந்து ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ விலை அதிகாலையில் ரூ.2500 ஆக இருந்தது. இதே போல் வாடாமல்லி, சம்பங்கி, அரளி பூக்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருந்தன. நேற்று இரவு முதல் அதிகாலை வரை சுமார் 500 டன் வரை பூக்கள் விற்பனையாகி உள்ளன.