பெங்களூரு: வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் செவ்வாய் இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் தேங்கிய மழை நீரே இன்னும் வடியாத நிலையில் இன்னும் மழை தொடரும் என்ற அறிவிப்பு பெங்களூருவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருப்பினும் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை வெள்ள நீர் கணிசமாக வடிந்ததால் ஒருசில பகுதிகளில் போக்குவரத்து சற்று இயல்புக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் இன்னும் மழை தொடரும் என்ற அறிவிப்பு பெங்களூருவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்பாராத திடீர் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஐடி நிறுவனங்களுடன் இன்று கர்நாடக அமைச்சர் சிஎன் அஸ்வத்நாராயணன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவின் ஐடி ஹப் என அறியப்படும் பெங்களூருவில் பெரிய நிறுவனங்கள் பலவும் இயங்குகின்றன. இந்நிலையில் இரண்டு நாட்களாக நகரில் மழை, வெள்ளத்தால் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளதால் ஐடி தொழில் முடங்கியுள்ளது.
சில நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதித்தாலும் கூட இணைய வசதி முடக்கம், மின் இணைப்பு துண்டிப்பு பிரச்சினைகளால் பணிகள் முடங்கியுள்ளதாக ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இன்று அமைச்சர் தலைமையில் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விப்ரோ, இன்ஃபோசிஸ், நாஸ்காம், கோல்ட்மேன் சாக்ஸ், இன்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
மீட்பு பணிகள் நிலவரம்: பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை இன்னும் சீரமைக்கப்படவில்லை. குறிப்பாக வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின் விநியோகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய பள்ளிக்கூட ஊழியர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார். தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த 23 வயது பெண் கீழே விழாமல் இருக்க மின் கம்பத்தைப் பிடிக்கப்போய் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகமும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் மாநகராட்சியே போர்வெல் இயந்திரங்கள் கொண்டு சென்று சில பகுதிகளில் குடி தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. டேங்கர்கள் மூலம் தண்ணீர் விநியோகமும் செய்யப்படுகிறது.
கொள்ளை லாபம்: இதற்கிடையில் பெங்களூரு ஐடி நிறுவனம், பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதிகளை சுற்றியிருக்கும் விடுதிகளில் வாடகையாக பெரும் தொகையை வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஓரிரவு மட்டும் தங்க ஏர்போர்ட் சாலையில் உள்ள ஒரு விடுதியில் ரூ.42,000 வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், மருத்துவமனைகளிலும் வயதானோர் அதிகமாக அனுமதியாகின்றனர். ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சினைகளுக்காக அவர்கள் அதிகமாக அனுமதியாகின்றனர்.