அமலா பால் புகார் கொடுத்த பவீந்தர் சிங்கிற்கு ஜாமின் : இருவரும் கணவன், மனைவி என கோர்ட்டில் தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு அவர் பஞ்சாபி பாடகர் பவீந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதற்கான படங்களும் வெளியானது, இதனை அமலாபால் மறுத்தார்.
இந்த நிலையில் திடீரென அமலாபால் பவீந்தர் சிங் மீது கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்திருந்தார். அதில் தன்னிடம், பவீந்தர்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் பெற்றிருந்தனர். அதை கேட்டபோது நானும் பவீந்தர் சிங்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டுவதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பவீந்தர்சிங், அவரது தந்தை சுந்தர்சிங் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குபதிந்து பவீந்தர்சிங்கை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி வானூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பவீந்தர் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமலா பாலும், பவீந்தர் சிங்கும் கணவன் மனைவி என்றும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்தனர் என்றும் கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்கள்.
அதோடு விழுப்புரம் ஆரோவில் அருகே பெரியமுதலியார்சாவடி பகுதியில் நடிகை அமலா பால் மற்றும் பவீந்தர்சிங் ஆகிய இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சில மாதங்கள் தங்கி குடும்பம் நடத்தினார்கள். அப்போது இருவருக்குள் சொத்து பரிவர்த்தனை நடந்தது. மேலும் சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர். பிறகு பவீந்தர்சிங்கிடமிருந்து அமலாபால் சில மாதங்களுக்கு முன்பு விலகி சென்றுவிட்டார். இப்போது திடீரென பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே பவீந்தர் சிங்கை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் பவீந்தர்சிங்கிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.