சீனாவிற்கான ரஷ்ய எரிவாயு விற்பனையில் 50-50 என்ற விகிதாசாரத்தில் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை சீனா செலுத்தும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து வருகிறது. உலக வளர்ச்சியின் முக்கிய இடம் ஆசியாவில் இருப்பதாக புடின் பேச்சு.
ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் உலகப் பொருளாதாரத்தை அழித்து வருவதால் மேற்கத்திய நாடுகள் தோல்வியடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது அதிகாரப்பூர்வ போர் தாக்குதலை தொடங்கியது.
இதனை எதிர்த்து அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல அடுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றனர். இந்தநிலையில் ரஷ்யாவின் பசிபிக் நகரமான விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்று வரும் கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரமே பாதிப்படைகிறது.
இவை கொரோனா வைரஸ் பாதிப்பை பின் தொடர்ந்து உலக பொருளாதாரத்தை மொத்தமாக பாதித்து வருகிறது. இதன்மூலம் மேற்கத்திய நாடுகள் தங்கள் திட்டங்களில் தோல்வியை தழுவி வருகிறது என புடின் தெரிவித்துள்ளார். அத்துடன் ”நான் இப்போது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் விதிக்கும் காய்ச்சல் நோயினை பற்றி பேசுகிறேன், மேற்கத்திய நாடுகள் தங்களது முரட்டுத்தனமான பொருளாதார தடைகளை பிற நாடுகளின் மீது விதிக்கின்றனர். இதனால் பிற நாடுகளின் இறையாண்மை தங்களது விருப்பத்திற்கு கீழ் கட்டுப்படுத்த நினைக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் “வரலாற்றின் போக்கை மாற்றும் முயற்சியில். உலக பொருளாதாரத்தின் முக்கிய தூண்களை எதிர்க்க மேற்கத்திய நாடுகள் முயல்கின்றனர். ஏற்கனவே டாலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது” எனவும் புடின் தெரிவித்தார்.
இதையடுத்து மேற்கத்திய நாடுகள் தங்களது விருப்பத்தை உலகின் மீது திணிக்க முயற்சிப்பதாகவும், ஆனால் உலக வளர்ச்சியின் முக்கிய இடம் ஆசியாவில் இருப்பதால் அவர்களின் சக்தி வீழ்ச்சியடைந்து வருவதாகவும் புடின் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் சீனாவிற்கான ரஷ்ய எரிவாயு விற்பனையில் 50-50 என்ற விகிதாசாரத்தில் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை சீனா செலுத்தும் என்றும் புடின் தெரிவித்தார்.