டெல்லி: அதிமுக பொது குழு வழக்கில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பழனிசாமி சார்பில் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமை கழக நிர்வாகிகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் அதற்கு முன்னதாக இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஆக.27-ம் தேதி விசாரணை நடந்தது. வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், ‘ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படலாம் என உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் சட்ட விதி. ஆனால் அதுபோன்று நடத்தப்படவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக இன்று காலை அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தற்போது அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.