ராகுல்காந்தியின் பாத யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த யாத்திரையின் போது, ராகுல்காந்தியுடன் 28 பெண் தொண்டர்களுடன் 118 பேர் கடைசி வரை பயணிக்க உள்ளனர். மேலும் 60 கேரவன்களும், பயணிக்கிறது.

மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு,  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில்,  இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

இதன் தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காதியிலான தேசிய கொடியை ராகுலிடம்  வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் ராகுல் மேற்கொண்டு வருகிறார். அவருடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்த ராகுல்காந்தி,  அங்கேயே சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடி தியானம் செய்தார். ராஜிவ் காந்தி நினைவிடத்தில் கங்கை, கோதாவரி, யமுனா, நர்மதா உள்ளிட்ட நதிகளின் புனித நீர் தெளிக்கப்பட்டது. அத்துடன் ராஜிவுக்குப் பிடித்த அவரது நினைவாக ஆந்திராவில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட 3 மாம்பழங்களை ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி வைத்து வணங்கினார்

அதன்பிறகு, ராஜிவ் காந்தி படுகொலையில் உயிர்நீத்த நபர்களின் குடும்பத்தினருடன் உரையாடினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி சார்பாக அங்கு அரசமரம் நடப்பட்டது. அதன்பிறகு, இசைக்கலைஞர் வீணை காயத்ரி நடத்திய இசையஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ராஜிவ் நினைவிட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை புறப்பட்ட ராகுல், தனி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.

அதைத்தொடர்ந்து பிற்பகல், கன்னியாகுமரி படகுத்துறையில் இருந்து தனிப் படகு மூலம் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் சிலைகளைப் பார்வையிட்டார் ராகுல். பின் அங்கிருந்து காந்தி மண்டபம் சென்ற ராகுல், மகாத்மா காந்தியின் புகைப்படங்களையும், நினைவுச் சின்னங்களையும் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அங்கேயே சிறிதுநேரம் தியானத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராகுல் வரவேற்றார். அதன்பிறகு காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ராகுல்  அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார்.

அப்போது,  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, சசிதரூர், திக் விஜய் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ராகுல் அறிமுகப்படுத்திவைத்தார். அங்கு, தமிழக முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன்பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ராகுல் உரையாடினார். அதன்பிறகு, ராகுல் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு, அவர்கள் இருவரும் காந்திக்கு நிகழ்த்தப்பட்ட இசையஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தைத் தேசியக்கொடி கொடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த பயணத்தின்போது, ராகுல் காந்தியுடன் 118 இளைஞர்கள் தொடக்கம் முதல் கடைசி வரை பயணிக்க உள்ளனர். உடல்திறன் அடிப்படையில் நடைபயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த  58 வயது விஜேந்திர சிங்கும் அடக்கம். மற்ற 38 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில், மகளிர் காங்கிரஸை சேர்ந்த 28 பெண் தொண்டர்களும் பங்கேற்கின்றனர்.  இதுதவிர எந்த மாநிலத்தில் நடைபயணம் செல்கிறதோ, அந்த மாநில எல்லை வரை உள்ளூரைச் சேர்ந்த 100 பேர் ராகுல் காந்தியுடன் செல்கின்றனர்.

ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் ஈடுபடுபவர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு, ஓய்வெடுக்க இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நடைபயணத்தின் பொது, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பக் குழுவிர், முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய 60 கேரவன்களும் செல்கிறது.

150 நாட்கள் பாரத் ஜோடா யாத்திரை: தமிழகத்தில் 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தியின் பயணத்திட்டம்.. முழு விவரம்….

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.