சென்னை: ஹாலிவுட் படமான அவதார் படத்தில் கூடுவிட்டு கூடு பாய்வதை சயின்ஸ் கலந்து சொல்லியே உலக ரசிகர்களை வியக்க வைத்தார் ஜேம்ஸ் கேமரூன்.
அந்த படத்திற்கு எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ தமிழ் ரசிகர்கள் அதே போல இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர்.
ஆனால், பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியான பிறகு அதை புறக்கணிக்கும் முடிவோடு பாகுபலியை தூக்கிக் கொண்டு வந்து டோலிவுட் ரசிகர்கள் சண்டை பிடித்து வருகின்றனர்.
தரமான கதை
உலகளவில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களை கவர அதன் ராஜதந்திர கதை தான் காரணம். பொன்னியின் செல்வன் கதையும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் பயணிக்கும். அந்த அளவுக்கு அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தரமான கதை. படிக்க ஆரம்பித்தால், 2000 பக்கங்களும் ஒரு வாரத்தில் உருண்டோடி விடும். ஒரு மணி நேரத்தில் கதை சுருக்க ஆடியோ புக்குகளும் கிடைக்கின்றன.
பாகுபலிக்கு வரவேற்பு
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி நடித்த பாகுபலி படத்தின் இரு பாகங்களுக்கும் இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்துக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர். படமும் தரமாக இருந்ததால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
பொன்னியின் செல்வன் ட்ரோல்
ஆனால், நேற்று வெளியான பொன்னியின் செல்வன் டிரைலரை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவே சிறப்பாக உள்ளது என பெருமையாக பார்த்து வரும் நிலையில், டோலிவுட் ரசிகர்களோ பாகுபலி படத்துடன் கம்பேர் செய்து படத்தை மட்டம் தட்டி வருகின்றனர். இதன் காரணமாக தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்னொரு ட்விட்டர் சண்டை வெடித்துள்ளது.
ஹாலிவுட் படங்களை சுட்டு
பதிலுக்கு இங்கே உள்ள ரசிகர்கள் சும்மா விடுவார்களா? பாகுபலி படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ராஜமெளலி எத்தனை ஹாலிவுட் படங்களில் இருந்து ஃபிரேம் பை ஃபிரேம்மாக சுட்டு எடுத்துள்ளார் என்றும் அந்த சிவகாமி குழந்தையை தூக்கி நிற்கும் காட்சியே பொன்னியின் செல்வன் கதையில் இருந்து எடுத்தது தான் என வீடியோ எடிட்டே போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
மணிரத்னம் புறக்கணிப்பு ஏன்
ராஜமெளலி ஸ்டைல் வேற, மணிரத்னம் ஸ்டைல் வேற, ஷங்கர் ஸ்டைல் வேற என்பது அனைத்து ரசிகர்களுக்குமே தெரியும். ஆனால், ஒவ்வொரு பிரம்மாண்ட படங்களுக்கும் பின்னால் மிகப்பெரிய உழைப்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ராஜமெளலிக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு தந்த நிலையில், மணிரத்னத்தை தெலுங்கு ரசிகர்கள் புறக்கணிப்பது ஏன் என்கிற கேள்வியை கோலிவுட் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ் போட்டி
பாகுபலி வசூலையே பொன்னியின் செல்வன் தாண்டி விடுமோ என்கிற பாக்ஸ் ஆபிஸ் போட்டியின் காரணமாகத்தான் டோலிவுட் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் காட்சிகளின் குறைகளை சுட்டிக் காட்டுவதும், பதிலுக்கு கோலிவுட் ரசிகர்கள் பாகுபலி படத்தில் வரும் ஆங்கிரி பேர்ட் காட்சிகளை எடுத்து போடுவதுமாக உள்ளனர். அடுத்த ராஜமெளலி படம் வந்தாலும் பார்க்க இங்கே ரசிகர்கள் ரெடியாக இருப்பது போல, பொன்னியின் செல்வன் படத்தையும் பார்த்து விட்டு நல்லா இருந்தா டோலிவுட் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால் போதும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.