போபால்: பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு 12 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மத்திய பிரதேச பூங்காவில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழு ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த குனோ தேசியப் பூங்காவுக்கு பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வரவுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிரதமர் மோடியின் 72வது ஆண்டு பிறந்தநாள் வரும் 17ம் தேதி வருகிறது. அன்றைய தினம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிறுத்தைகள், குனோ தேசியப் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த குழுவினர் குனோ பூங்காவிற்கு வந்துள்ளனர். ஆனால் இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்க சிறுத்தைகளை அனுப்புவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரம் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக 12 சிறுத்தைகள் நமீபியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தயார்நிலையில் உள்ளன’ என்று தெரிவித்தன. இருப்பினும், சிறுத்தைகளை கொண்டு வருவது குறித்து தங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று மத்திய பிரதேச தலைமை வனப் பாதுகாவலர் ஜே.எஸ்.சவுகான் தெரிவித்துள்ளார்.