ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இது தமிழர்களின் முக்கியப் பண்டிகையாகவும் விளங்கிவந்துள்ளது.
‘மாயோன் மேய ஓண நன்னாள்’ என்று ஓணத்தைக் குறிப்பிடுகிறது மதுரைக்காஞ்சி. ’ஆவணி அவிட்டத்தில் ஓணப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது’ என்கிறார் நக்கீரர்.
‘திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து…’ என்ற பரிபாடலும் ‘நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு…’ என்ற முல்லைப்பாட்டும் வாமன அவதாரத்தையும் மாவலி சக்கரவர்த்தி பாதாளம் சென்றதையும் அறிவிக்கும்.
‘மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு’ என்று திருக்குறளும் அடியளந்த செய்தியை அறிவிக்கிறது. ‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடிய…’ சிலம்பும் வாமனனைத் துதிக்கிறது.
சிறப்பான விருந்துகளும், ‘சேரிப்போர்’ என்னும் வீர விளையாட்டை இளைஞர்கள் கூடி, நீலக்கச்சை அணிந்து விளையாடினார்கள் என்கிறது மதுரைக்காஞ்சி. பண்டைய முல்லை நிலத் தமிழர்கள் மாயோன் விழாவை ஓணத்தில்தான் கொண்டாடினர் என்கின்றன ஆய்வுகள்.
இறையனார் களவியல் நூலுக்கு உரை எழுதிய நக்கீரர், ‘மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே’ என்கிறார். இதில், ஆவணி அவிட்டம் என்பது ஓணத்திருவிழாவே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
‘ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்’ என்று பாடுகிறார் திருஞான சம்பந்தர். ‘எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்’ என்கிறார் பெரியாழ்வார்.
‘சித்திரைத் திங்கள் சித்திரையும் பிரட்டாதி ஓணமும்…’ என்று கி.பி. 897-ம் ஆண்டு திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயக் கல்வெட்டு, சித்ரா பௌர்ணமி மற்றும் புரட்டாசி ஓணத் திருவிழாக்கள் கொண்டாடியதைத் தெரிவிக்கிறது.
ஆவணி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாள்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களுக்காக வாழும் நல்லவர்கள் எப்போதும் கொண்டாடப்படுவார்கள் என்பதே இந்த விழாவின் அடிப்படை!
சாதி, மதம், மொழி தாண்டி அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையில் அனைவருக்கும் நாம் வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறிக்கொள்வோம்.