புவனேஸ்வர் :ஒடிசாவில் விஷ எறும்புகள் சாரை சாரையாக படையெடுத்து வருவதால், கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பழங்குடியின கிராமங்களில் விஷ எறும்புகள் என அழைக்கப்படும் சிவப்பு எறும்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இவை அதிகமாக ஊர்ந்து வரும். இந்நிலையில் பிரமானஷி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போது வெள்ளம் வடியத் துவங்கியுள்ளதை அடுத்து, விஷ எறும்புகள் அதிக அளவில் கிராமங்களுக்குள் படையெடுத்து வருகின்றன. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விஷ எறும்புகள் வருவதால், பல கிராமங்களில் மக்கள் எறும்பு மருந்தை வீட்டைச் சுற்றி போட்டுள்ளனர். அதையும் தாண்டி எறும்புகள் வீட்டுக்குள் நுழைந்து விடுகின்றன. இந்த எறும்பு கடித்தால், உடலில் பெரிய கொப்புளம் ஏற்படுவதுடன், கடுமையான எரிச்சலும் ஏற்படும்; சிலருக்கு இதனால் காய்ச்சலும் அடிக்கிறது. இதற்கு பயந்து சில கிராமங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வேறு பகுதிகளில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். வீடு, சாலை, வயல்வெளி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விஷ எறும்புகள் சாரை சாரையாக வருகின்றன. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:இந்த எறும்புகள், வழக்கமாக மழைக்காலங்களில் வரும். இதை சிவப்பு எறும்பு அல்லது தீ எறும்பு என அழைப்போம். ஆனால், அவை கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்குத் தான் இருக்கும். இப்போது இதுவரை இல்லாத வகையில் ஏராளமான எறும்புகள் வந்துள்ளன. நிம்மதியாக துாங்க முடியவில்லை. குழந்தைகளால் படிக்க முடியவில்லை. எறும்பு மருந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ குழுக்கள், தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பூச்சி மருந்து தெளித்து எறும்புகளை கொல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement