தீவிரவாத மிரட்டல் எதிரொலி: ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அலுவலகத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ் அமைப்பு. சர்வதேச அளவில் இயங்கும் இதன் கிளை டெல்லியின் ஜண்டேவாலன் பகுதியிலும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு பல முறை தீவிரவாத அமைப்புகள் மற்றும் மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

இதை உறுதி செய்த மத்திய உளவுத்துறை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மேலும் சில அலுவலகங்களுக்கும் இதுபோன்ற மிரட்டல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, நேற்று முதல் டெல்லியின் ஆர்எஸ்எஸ் கிளை அலுவலகத்துக்கு மத்திய பாதுகாப்பு படைகளில் ஒன்றான சிஐஎஸ்எப் (மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை) சார்பிலான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்கான பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு அவர்களின் கீழ் நவீன ஆயுதங்கள் ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இதனிடையே, ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பாகவத்துக்கும் மிரட்டல்கள் இருந்து வந்தன. இதன் காரணமாக அவருக்கு ஏற்கெனவே மத்திய அரசின் இசட் ப்ளஸ் எனும் உயரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிராவின் நாக்பூர் அலுவலகத்துக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு பல ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, நாக்பூரை போல், டெல்லியின் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நுழைவோரும், வெளியேறுவோரும் மத்திய பாதுகாப்பு படையின் கண்காணிப்பில் இருப்பர். இதன் உள்ளே நுழைபவர்கள் அதற்குமுன் சிஐஎஸ்எப் படையினரின் முறையான அனுமதியையும் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற மிரட்டல்கள் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் கிளைகளுக்கும் வந்தவண்ணம் இருப்பதாகத் தெரிகிறது. எனவே, அங்கும் ஆய்வு செய்து அந்த அலுவலகங்களுக்கும் மத்திய பாதுகாப்பு படை படிப்படியாக அமர்த்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.