பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தல்…..

நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் பாரதூரமான நிலைமை தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமையின் கீழ் தொடர் நிகழ்ச்சித்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என குழுவின் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் நேற்றுக் (06) கூடியபோதே இவ்வாறு முன்மொழியப்பட்டது.

இதில் கடந்த யூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “ 2022ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை” தொடர்பில் நிதி அமைச்சு, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட அதிகாரிகளால் முன்வைப்புக்களுடன் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. இந்த முன்வைப்புக்களின் போது தெளிவுபடுத்தப்பட்ட பல்வேறு விடயங்கள் காரணமாக இவ்வாறு நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

பணவீக்கம் அதிகரித்தமையால் கடன்களுக்கான வட்டிவீதமும் அதிகரிக்கலாம் என இக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தெரிவித்தார். இதனால் பணவீக்கத்துக்கும் வட்டி வீதத்துக்கும் இடையில் காணப்படும் தொடர்பு குறித்து சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி முதலாவதாக நடத்தப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்தார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இன்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்வதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 2019ஆம் ஆண்டு இறுதிக் காலாண்டில் வரி சதவீதம் குறைக்கப்பட்டமையால் அரசாங்கத்தின் வருமானம் குறைந்தமை தொடர்பிலும் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கத்தின் வருமானம் குறைவதற்கு கொவிட் தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், 2022ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில்,  அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ எம்.ஏ.சுமந்திரன், கௌரவ துமிந்த திஸாநாயக்க, கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல, கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ மயந்த திஸாநாயக்க, மற்றும் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.