மலையாள மொழி பேசும் மக்கள் நீலகிரியில் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முக்கிய திருவிழாவான ஓணத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நீலகிரியில் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமரிசையாக ஓணம் கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு நீலகிரியில் ஓணம் திருவிழா களைகட்டியிருக்கிறது.
வீடுகளில் பூக்கோலமிட்டு அலங்கரித்தும், கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்தும் இறைவனை வணங்கி வருகின்றனர். பூக்கள், பழம் காய்கறி போன்றவற்றை வாங்கும் மக்களால் சந்தைகள் நிரம்பி வழிகின்றன. கல்வி நிலையங்களிலும் ஓணம் கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. ஓணத்தைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகளும் ஊட்டிக்குப் படையெடுத்து வருகின்றனர்.
ஊட்டியைச் சேர்ந்த மலையாள மொழி பேசும் மக்கள் தெரிவிக்கையில், “ஓணம் திருநாளில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகளிலும், பூக்கோலமிட்டு வழிபட்டு வருகிறோம். கேரளப் பெண்களின் பாரம்பர்ய உடையை அணிந்து இறைவனை வணங்குகிறோம்.
செண்டை மேளங்கள் முழங்கத் திருவாதிரைக்களி எனப்படும் பாரம்பர்ய நடனமாடி இறைவனை மகிழ்விக்கிறோம். அறுசுவை உணவும் படைக்கப்படும்” என்றனர்.