நாகர்கோவில்: மலையோர பகுதிகளில் பலத்த மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக சிற்றார்-2, முள்ளங்கினாவிளை ஆகிய இடங்களில் 13 மி.மீ மழை பெய்திருந்தது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.45 அடியாக இருந்தது. அணைக்கு 1470 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 218 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. உபரி நீர் 3 ஆயிரம் கன அடி வீதம் மறுகாலில் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.77 அடியாக இருந்தது. அணைக்கு 922 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது, 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 12.73 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 178 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
சிற்றார்-2ல் 12.82 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 40 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. பொய்கையில் 16.90 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 37.89 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 14 அடியாகும். அணைக்கு 8.9 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 8.6 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மலையோர பகுதிகளில் ெதாடர்ந்து பெய்து வருகின்ற கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிற்றார்-1, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் உச்சநீர்மட்டத்தை எட்டியுள்ளன.
பேச்சிப்பாறை அணையில் மறுகால் தண்ணீர் திறப்பையொட்டி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கின்ற மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று மாலை முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் அருவியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுவதால் 2வது நாளாக தடை தொடர்கிறது.