தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். மெட்ராஸ், அட்டக்கத்தி, காலா, கபாலி என்று தரமான படங்களை இயக்கி தமிழ் சினிமா வட்டாரத்தை குறுகியக் காலத்திலேயே திரும்பி பார்க்க வைத்தார்.
இவர், இயக்கும் படங்கள் பெரும்பாலும் சாதி கொடுமைகளை தோலுரித்து காட்டும் விதமாக உள்ளதால் விளிம்பு நிலை மக்களின் விருப்ப பட்டியலில் பா.ரஞ்சித்துக்கு முதல் இடம் உள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் மனதில் தோன்றும் கருத்துக்களை இடம், பொருள் பாராமல் துணிச்சலுடன் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர் எனவும் திரை துறை வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
படம் இயக்கினோமா?, நாலு காசு பார்த்தோமா? என்ற மனநிலையில் இருக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் சமூக சிந்தனையுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கின்ற இயக்குனராக பா.ரஞ்சித் உள்ளதால் இவருக்கு தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கை விடுவது, பேட்டி அளிப்பது, படம் தயாரிப்பது, படங்களை இயக்குவது என நிறுத்திக்கொள்ளாமல் ஆண்டுதோறும் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடத்தி பல்வேறு மக்கள் விரும்பக்கூடிய ஒருவராக பா.ரஞ்சித் விளங்குகிறார்.
சமீபத்தில் கூட, ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கின்ற படத்தை எடுத்து தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே நிலவும் காதல், திருநங்கை-ஆணுக்கு இடையே நிலவும் காதல் என, பல விஷயங்களை துணிச்சலாக காட்டி வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் யூடியூப் சேனல் நடத்திய நேர்காணலில் பா.ரஞ்சித் கூறிய கருத்துக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பேட்டியில் பா.ரஞ்சித், ‘நான் அரசியல்வாதியாக ஆவேனா? என்று தெரியவில்லை. வரும் காலங்களில் அரசியல்வாதியாக இருந்தாலும் இருக்கலாம். அது இப்போது எனக்கு தெரியவில்லை.
தற்போது பலருக்கும் ஆச்சரியம் அளிக்க கூடிய தலைவராக
உள்ளார். பல தலித் அமைப்புகள் இந்தியா முழுவதும் இருந்தாலும், விசிக மிக..மிக முக்கியமான கட்சியாக உள்ளது.
எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் இன்னும் சனாதன எதிர்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னிறுத்தி வருகிறது. மதவாதம், சனாதனத்தை எதிர்க்கக் கூடிய தலைவராக திருமாவளவன் கர்ஜித்து கொண்டு இருக்கிறார்’ என பா.ரஞ்சித் பகிரங்கமாக பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற சூழலில் இந்த கருத்துக்கள் வெளிப்பட்டு இருப்பதால், பா.ரஞ்சித் எந்த நேரத்திலும் திருமாவளவனுடன் கை கோர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் மேலோங்கி உள்ளது.
இதுகுறித்து விசிக மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘தலைவர் திருமாவளவனின் இலக்குதான் ஒட்டுமொத்த தலித் மக்களின் எதிர்பார்ப்பும். அப்படி இருக்கும்போது தலைவருடன் பா.ரஞ்சித் கை கோர்ப்பது இன்னும் கூடுதல் பலமாக இருக்கும்.
அப்படி ஒருவேளை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பா.ரஞ்சித் வருவார் என்றால், நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம். பா.ரஞ்சித் மட்டுமல்லாமல் ஒத்த கருத்து உடையவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வரலாம்’ என, கூறி முடித்துக்கொண்டார்.
அதே சமயம் விசிகவில் பா.ரஞ்சித் இணைவது உறுதி. தலைவரை நேசிக்கும் லட்சக்கணக்கான தம்பிகளில் பா.ரஞ்சித்தும் ஒருவர் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முக்கிய நிர்வாகிகளே உற்சாக வரவேற்பு தருவதை பா.ரஞ்சித் ஏற்பாரா? என்பது வரும் காலங்களில்தான் தெரியவரும்.