சென்னை: 72 நாட்களுக்குப் பின்னர், நாளை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லவிருக்கிறார், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நாளை (செப்.8) வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் ஆகியோர் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
72 நாட்களுக்குப் பிறகு… அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் முதல் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொது்ககுழுக் கூட்டம் நடந்தபோது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 21-ம் தேதி இந்த சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு பின் அவர், அதிமுக அலுவலகத்திறகு செல்லவில்லை. இறுதியாக கடந்த ஜூன் 27-ம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றிருந்த நிலையில், 72 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் நாளை (செப்.8) அங்கு செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.