ரஷ்யாவில் நடைபெற்ற 7-வது கிழக்கு பொருளாதார மன்ற அமர்வின் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “ரஷ்யாவில் முதலீட்டை அதிகரிக்க 2015-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பொருளாதார மன்றம், ரஷ்ய தூரகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான சர்வதேச முதன்மை தளமாக மாறியிருக்கிறது. ஆர்க்டிக் விவகாரங்களில் (arctic subjects) ரஷ்யாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் முழு உலகிலும் தாக்கத்தை உருவாக்குகின்றன. உக்ரைன் மோதல் மற்றும் கொரோனா தொற்றுநோய் ஆகியவை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதைத் தொடர்ந்து, உணவு தானியங்கள், உரங்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை வளரும் நாடுகளுக்கு ஒரு முக்கிய கவலையாக மாறியது. ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது. மேலும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து அமைதியான முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே நேரத்தில் என்னை மன்றத்திற்கு அழைத்ததற்காக ரஷ்ய அதிபருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.