சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11-ம் தேதி சூறையாடப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் நேற்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பழனிசாமி தலைமையில் அங்கு கூட்டம் தொடங்கிய அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அப்போது, ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில், கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள், காவல்துறையினர் என மொத்தம் 47 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறை தொடர்பாக பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, ஆவணங்களை திரும்ப பெற்றுத் தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
7 பிரிவுகளின்கீழ் வழக்கு
இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை போலீஸார் 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டார். ஆனால்,சிபிசிஐடி போலீஸார் விசாரணையை முறையாக தொடங்கவில்லை என்று கூறி உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் முறையீடு செய்தார்.
இந்நிலையில், டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் சிபிசிஐடி போலீஸார் நேற்று காலை 7 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் இருந்தார். வன்முறையின்போது சேதப்படுத்தப்பட்ட பொருட்கள் எவை, காணாமல் போனவை என்னென்ன என்பது குறித்து போலீஸார் குறிப்பெடுத்துக் கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் அங்கு பதிவாகி இருந்த ஆதாரங்களை சேகரித்தனர். சுமார் 5 மணி நேரம் ஆய்வுப் பணி தொடர்ந்தது. மோதல் சம்பவத்தின்போது, பதிவான சிசிடிவி காட்சிகளையும் சிபிசிஐடி பிரிவு போலீஸார் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
பழனிசாமி இன்று வருகை
ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால், அன்றைக்கு ஏற்பட்ட வன்முறை காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்சி அலுவலகத்தை திறந்து சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேநேரத்தில் ஒரு மாதத்துக்கு கட்சி அலுவலகத்துக்கு யாரும் வரக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, பழனிசாமி நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பழனிசாமி இன்று காலை 10 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருகிறார். அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.