“ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பிலிருந்து வெளியேறுகின்றனர். மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டால், அது போலியாகும். இவ்வாறு போலிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று சமீபத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

மேலும், “நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள், அநீதிகள் தொடர்பாக புகார்களை விசாரித்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்குத் தமிழகத்திலிருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில், 100 வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று, 60 வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்கள் மீதான வன்முறை, தாக்குதல்களில் ராஜஸ்தான் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளன. போக்குவரத்துத் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பொறுப்பு வகித்தபோது, அரசு அதிகாரியை ஜாதிப் பெயரைக் கூறித் திட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என தாட்கோ இயக்குநர் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்ல தனிப் பாதை உள்ளது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே பட்டியலினத்தவர் மதம் மாறினாலும், அவர்களின் வாழ்வாதார நிலையில் மாற்றம் இல்லாத போது அவர்களுக்கான பிரதிநிதித்துவமும், இட ஒதுக்கீடும் அவசியம் என்று பொதுநல வழக்குக்கான மையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்திருக்கிறது. விசாரணையில் இருக்கும் இந்த வழக்கில், மூன்று வாரக் காலத்தில் அரசு தன் நிலைப்பாட்டை சொல்ல வேண்டுமென்று கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான வென்மணி, “பொதுவாகப் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பை சார்ந்தவர்கள் எந்த பிரிவிலிருந்தாலும் இயல்பாகவே மாநில அரசின் பி.சி பட்டியலுக்கும், மத்திய அரசின் ஓ.பி.சி பட்டியலுக்கும் மாறுவார்கள். இதில் பௌத்தம், சீக்கியம் இரு மதங்களை சார்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் ஓ.பி.சி பட்டியலுக்குப் போய்விடுவார்கள். மதம் மாறுவது சரியா தவறா என்கிற விஷயத்தைத் தாண்டி, மதம் மாறினால் இவர்களுக்கு இருக்கும் உரிமைகள் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதுதான் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்புகிற, ஏற்றுக் கொள்கிற மதத்தை ஏற்பது தவறில்லை என்கிறது அரசமைப்புச்சட்டம் 25. அப்படி இருக்கும் போது திரும்ப திரும்ப கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மதம் மாறுவது என்கிற செய்தி இந்துத்துவ கிளர்ச்சிக்காகத்தான் அதைப் பேசுபவர்கள் பயன்படுத்துகிறார்கள். படித்த சிலர் தங்கள் சுயமரியாதைக்காக மற்ற மதத்தைச் சார்ந்து போகிறார்களே தவிர மதத்தால் ஈர்க்கப்பட்டில்லை. இஸ்லாம் போனால் பாய் என்கிற ஒற்றை வார்த்தையிலும், கிறிஸ்தவர்களாக மாறினால் ஆர்.சி. , சி.எஸ்.ஐ என மட்டுமே அடையாளப்படுவார்கள். ஆனால், இந்து சமயத்தில் மட்டும்தான் ஒருவர் இறந்தால் கூட எந்த சுடுகாடு தேடுவது என்கிற நிலை இருக்கிறது.
மதம் மாறுவதைக் காரணம் காட்டி இட ஒதுக்கீட்டை மறுப்பது ஆபத்தானது. சுயமரியாதை நோக்கி செல்பவர்களின் அனைத்து உரிமையையும் முடக்கி, அப்படி ஒரு எண்ணம் பட்டியல் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு வரகூடாது என்பதன் அடிப்படையில்தான் இது போன்ற விவாதங்களையே உருவாக்குகிறார்கள். வட இந்தியாவில் மிக பெரிய ஓட்டு வங்கி வைத்திருப்பதால், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நேரடியாக இன்றைய மத்திய அரசு பேச முடியாது. எனவே பட்டியலின மக்களுக்குள்ளேயே உள் கலவரம் ஏற்படுத்தி, அவர்கள் மதம் மாறாமல் இருப்பதற்காகத் தொடர்ந்து சில செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. எப்படி சிறுபான்மை மக்களைப் பயன்படுத்துவதற்கு, மிரட்டுவதற்கு சில விஷயங்கள் சட்டங்கள் மூலம் முன்னெடுக்கிறார்களோ, அதோ போல் பட்டியலின மக்களை மிரட்டுவதற்கான ஒரு விஷயம்தான் இது” என்றார்.