ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நீண்டுள்ள, தில்லியின் ராஜ்பத் (ராஜ பாதை), கர்தவ்யா பாதை (கடமையின் பாதை) என மறுபெயரிடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை வியாழக்கிழமை (2022, செப்டம்பர் 8ம் தேதி) திறந்து வைக்கிறார். சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என்பது, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். அங்கு புதிய முக்கோண பாராளுமன்ற கட்டிடம், மத்திய செயலகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ திட்டத்தின் வான்வழி காட்சிகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. ட்ரோன்கள் மூலம் படமாக்கப்பட்ட வான்வழி காட்சிகள் பிரம்மிப்பை ஊட்டுவதாக உள்ளது. நடைபாதைகளை கொண்ட நீண்ட புல்வெளி திட்டுகளுடன் கண்ணை கொள்ளை கொள்ளும் வகையில், மிக நேர்த்தியாக சமச்சீராக வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலை, பசுமையான இடங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கால்வாய்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள மனதை கொள்ளை கொள்ளும். இவற்றை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ள நிலையில், இவை பொது மக்கள் உபயோகத்திற்கு விரைவில் திறந்து வைக்கப்படும்.
மத்திய அரசு பகிர்ந்து கொண்டுள்ள வீடியோவை கீழே காணலாம்:
#WATCH | Delhi: Visuals from the redeveloped Kartavya Path that will soon be opened for public use pic.twitter.com/YUoNXFToRL
— ANI (@ANI) September 7, 2022
சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமானத்திற்காக, பொது இடமான இப்பகுதி கடந்த 19 மாதங்களாக கட்டுமான பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. புதுப்பிக்கப்பட்ட பகுதியில் 900க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், நான்கு பாதசாரி சுரங்கப்பாதைகள் மற்றும் 422 சிவப்பு கிரானைட் பெஞ்சுகள் உள்ளன. இவை அனைத்தும் பொதுமக்கள் வசதியாக இளைபாறும் வகையிலும், சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையிலும் உள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதிகள் மற்றும் 1,10,457 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.